சிவபுராணம் பாடல் 1

1

சிவபுராணம் பாடல் 1



நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொருள்:


நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.

திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.

தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.

ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:


1.      மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

2.      திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார்.

3.      இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.


திருச்சிற்றம்பலம் !!!

Post a Comment

1 Comments
Post a Comment
To Top