முருகனின் அறுபடை வீடுகள் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிவு :
அறுபடை வீடுகள் என்பவை தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனை வழிபடும் சிறப்பு வழிபாட்டு இடங்கள் ஆகும்.

முருகனின் திருவருளைப் பெற எங்கு சென்று வழிபட வேண்டும் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தி (வழிகாட்டியுள்ளார்) உள்ளார்.

நக்கீரரால் முன்வைக்கப்பட்ட ஆறுதிருத்தலங்கள் ஆற்றுப் படை வீடுகள் என அழைப்பட்டு பின் அறுபடை வீடுகள் என மருவி விட்டன.


அறுபடை வீடுகளாவன :


1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழநி

4. சுவாமி மலை

5. திருத்தணி

6. பழமுதிர்ச்சோலை
திருப்பரங்குன்றம் (Thiruparankundram)

இவ்விடம் முதலாவது படைவீடாகும். இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டுக்கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ்விடம் சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றியதற்காக தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மகள் தேவயானையை முருகப் பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்த இடம் எனக் கருதப்படுகிறது.

ஆறுபடை வீடுகளில் இவ்விடத்தில் தான் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகனுக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அபிசேகங்கள் முருகனின் வேலுக்கு நடத்தப்படுகிறது.

சிவனை நோக்கி தவமிருந்த முருகனுக்கு சிவன் தை பூசத்தில் காட்சியருளினார். எனவே இங்கு தைப்பூசமும், வைகாசி விசாகமும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

 திருச்செந்தூர் (Thiruchendur)


இவ்விடம் இரண்டாவது படைவீடாகும். இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.

சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களுடன் போர் புரிந்து அவர்களை வெற்றி பெற்ற இடமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் அலைகள் வந்து மோதும் இடமாதலின் இவ்விடம் திருச்சீரலைவாய் என்றழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வணங்கியே குமரகுருபரர் பேசும் சக்தியைப் பெற்றதாகவும், ஆதிசங்கரர் வயிற்று வலி நீங்கப் பெற்று சுப்ரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

இத்தல இறைவன் திருச்செந்தில் ஆண்டான் என்றே வணங்கப்படுகிறார். இங்கு கந்த சஷ்டி, ஆவணித் திருவிழா, மாசித் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பழநி (Palani)


இவ்விடம் மூன்றாவது படைவீடு என்ற சிறப்பினைப் பெறுகிறது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

முருகன் ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்டு ஆண்டிக் கோலத்தில் அருள் புரியும் இடம். இங்கு மலை அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் உள்ளது. இவ்விடத்திலேதான் காவடி எடுக்கும் முறை உருவானது என்று கருதப்படுகிறது.

பங்குனி உத்திரத்தில் இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இத்தலத்து இறைவனை போகர் என்னும் சித்தர் நவபாஷணத்தில் உருவாக்கினார். அதனால் முருகனின் அபிசேக பஞ்சாமிருதம், பால் ஆகியவற்றை உட்கொண்டால் உடல்நலம் பெறும் என்று நம்பப்படுகிறது. இவ்விடம் சங்க காலத்தில் திருஆவினன்குடி என்ற பெயரால் வழங்கப்பட்டது.

இத்தல இறைவனை வணங்கியே தமிழ் இலக்கணம் கற்றார் என புராணங்கள் கூறியுள்ளன. நக்கீரரும், அருணகிரிநாதரும் இத்தல இறைவனைப்பற்றி பாடியுள்ளார்கள்.

சுவாமிமலை (Swamimalai)


இவ்விடம் நான்காவது படைவீடாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இவ்விடத்தில் முருகப்பெருமான் தன் தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என கருதப்படுகிறது. அதனால் இத்தல இறைவன் தகப்பன் சாமி, சுவாமி நாதன் என அழைக்கப்படுகிறார். அதனால் இவ்விடம் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் முருகனை தரிசிக்க 60 படிகட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இவைகள் தமிழ் வருடங்கள் 60-ஐக் குறிக்கின்றன. இவ்விடத்திற்கு திருவேரகம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

திருத்தணி (Thiruttani)


இவ்விடம் ஐந்தாவது படை வீடாகும். இவ்விடம் திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குதான் முருகப்பெருமான் வள்ளியை மணந்தார் எனக் கருதப்படுகிறது.

வள்ளியின் தந்தையுடன் உண்டான போரினால் ஏற்பட்ட சினம் இங்கு தணிந்ததால் இவ்விடம் தணிகை என்று அழைக்கப்பட்டு பின் திருத்தணிகை என்றானது. இவ்விடத்திற்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.

இத்தல இறைவனை வணங்கினால் மக்களின் துன்பம்,கவலை,பிணி,வறுமை ஆகியன தீரும் எனவும் கூறப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை (Pazhamudircholai)

இவ்விடம் முருகனின் ஆறுவது படைவீடு என்ற சிறப்பினைப் பெறுகிறது. இவ்விடம் மதுரையிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு தான் முருகப் பெருமான் ஒளவைக்கு நாவல் பழத்தினைக் கொண்டு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற திருவிளையாடலை நடத்தினார் என்று கூறப்படுகிறது.

பழம்முதிர் சோலை என்பதற்கு பழங்கள் உதிர்க்கின்ற சோலை என்பது பொருளாகும்.  மலையின் மேல் முருகன் கோவிலும், மலை அடிவாரத்தில் அழகர் கோவிலும் அமைந்துள்ளன.

இம்மலையின் உச்சியில் நூபுர கங்கை என்ற புனிதத் தீர்த்தம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்தீர்த்தத்தில் நீர் வருவதாகக் கருதப்படுகிறது. இவ்விடம் சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது.


arupadai veedu , Six Abodes of Murugan , Arupadai Veedu Murugan Temple , Aarupadai Veedu , arupadai veedu murugan kovil

Post a Comment

Previous Post Next Post