சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

0
"சேவலாக துடுக்குடன் கூவி,பூனையாக துவண்டு வெளியேறிய இந்திரன்''.....

"'சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில்''.இந்திரனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டாம்.

தேவேந்திரன்,விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள்.அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்) உள்ள ஓர் உலகமாம்.

அங்கு  பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமை,  கிருதாசி முதலிய அப்சரசுகள் நிறைந்துள்ளனராம்.
இங்கு இருமனப் பெண்டிரும்,விரதம் தவறிய பெண்களும்
சென்றடைவராம்.
இவர்களுக்குத் தலைவன் இந்திரன். அதனால்தான் இந்திரனுக்கு “அரம்பையர் கோன்” என்று பெயர்.

 உலகத்தில் 'பெருந்தவம்’ செய்வோர் இந்திர பதவியை அடைவர்.பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்த “தேவருலக அப்சரசுகளை” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக் கெடுப்பான்.அப்படியானால் அவர்களால் இந்திர பதவி வகிக்க முடியாதல்லவா?அதே முறையில் தான் அரம்பையர் உலகை சேர்ந்த மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்தாளாம்.

மாற்றான் மனைவி மீது மோகம் என்பது எந்த காலத்தில்தான் இல்லை.புராணகாலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன!!..இந்த முன்னுரையை நிறுத்திவிட்டு வாருங்கள்.

இனி கதைக்கு வருவோம்.

ஒருமுறை தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார்.கௌதம முனிவர் மனைவி அகலிகை.சிறந்த அழகி;கற்புக்கரசி.

தேவர் தலைவனான இந்திரன்,கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான்.ஒருநாள் நள்ளிரவில் சேவல் வடிவெடுத்து கூவினான்.பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார்.இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான்.தன் இச்சையைத் தீர்க்க
அகலிகையை அணைக்கின்றான்.வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள்.

மஞ்சத்தில் பசி ஆறி தன் விரகதாபத்தை தீர்த்துக்கொண்டான்
இந்திரன்.கட்டிலில் வைத்து அவன் காட்டிய வித்தையில் அவள் கதிகலங்கிப் போனாள்.இத்தனை நாள் இதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்?என்று  ஒரு சந்தேகம் அகலிகைக்கு அப்போதுதான் மனதுக்குள் வந்தது.
அகலிகை இப்படி
நினைத்து முடிக்கவில்லை!

கதவு தட்டப்படுகிறது. ''அகலிகை அகலிகை கதவை திற'' என்று குரல் வந்தது.கூப்பிடுவது கணவர் கௌதமன் குரல் போல் இருக்கவே,பதறியடித்த அகலிகை தன்னோடு ஓருடலாகி  விட்டவன் முகத்தைப்
பார்க்கிறாள்.

கௌதமன்தான் இங்கேயும்!.

தன்னைக் கட்டித் தழுவி இருப்பவனை உதறிவிட்டு எழுகிறாள். “யார் நீ” என்கிறாள்.கவுதமன் வேடம் பூண்டுவந்த இந்திரனின் முகம் வெளிறிற்று.கைகளில் நடுக்கம்.“என்னை மன்னித்து
விடு, நான் தேவேந்திரன்” என்கிறான்.

வெளியே மீண்டும் கதவு தட்டப்படுகிறது.கலைந்து கிடந்த ஆடையை அள்ளி அலங்கோலமாய் உடம்பில் சுற்றிக் கொண்டாள்;கதவை திறந்தாள்.அகலிகை நின்ற கோலமே என்ன நடந்தது என்பதை
கௌதமனுக்கு உணர்த்தி விட்டது.கோபாவேசத்தில் நிற்கும் கௌதமனைப் பார்த்த இந்திரன் பூனையாய் உருமாறி மெல்ல கதவிடுக்கின் வழியாக வர,விஷயமறிந்த கௌதம முனிவர், இந்திரன் உடம்பெங்கும் பெண்குறிகளாகும் படி சபித்தார்.

தேவேந்திரனாய்  இருந்தும் காமனால் ஆட்கொள்ளப்பட்டமையால் காமத்தை வெல்ல
முடியாத இந்திரன் கவுதம முனிவரால் சாபம் பெற்றானல்லவா?அப்படி தாம் பெற்ற சாபத்தை இந்திரன் முழுவதுமாக சிவபூஜை செய்து போக்கிக் கொண்டான்.

இந்திரன் இன்றும் தான் சிவபூஜை செய்த திருக்கோயிலில் நன்றிப் பெருக்குடன் ஈசனுக்கு
இன்றும் அத்திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜையை இந்திரனே செய்து வருகின்றான்.

இந்திரனின் பாவத்தை,அவன் பெற்ற சாபத்தை  ஈசன் போக்கியருளிய பரம பவித்திரமான பெரும் புண்ணியத்தலம் எது தெரியுமா?!.

ஆம்!

கன்னியாய்
குமரியாய் அருளும் அன்னை உமையவள் ஆளும் கன்னியாகுமரி அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில்தான் அது.

இன்றும் இங்கு இந்திரனே அர்த்தஜாம பூஜையை தினமும் நிகழ்த்துகிறார்..

பாருங்கள்!

பூலோகத்தில் உள்ள இத்தலத்தின் மகிமையை..தேவலோக இந்திரன் இப்போதும்,இன்றளவும் அனுதினமும் வந்து
அர்த்தஜாம பூஜை நிகழ்த்துகிறார் என்றால் இத்தலத்தின் மகிமையை என்னென்பது?!...

''சுசீ+இந்திரம்''=''சுசீந்திரம்" என்று பகுத்து,இந்திரன் அகலிகை விஷயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இத்தலம் சுசீந்திரம் என்றானதாம்.

இந்திரன் என்றாலே இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை
அடைந்தவன் என்று பொருள்.ஆனால் இந்திரன் எப்படி, இப்படி எல்லாம் அகலிகையுடன் இருந்துள்ளாரே என்று  கேள்விப்படுகிறோம்.

இவை எல்லாம் தேவ
நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு பல துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனித சமுதாயத்தைக் கரையேற்றும் வழிமுறைகளைக்
காட்டிய நிலையே ஆகும்.

ஆம்!

இதன் மூலம் கலிகாலத்தில் இப்படி அறிந்தும்,அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும் தவறிழைத்தவர்களுக்கு அவர்களின் குற்றம் ,குறை, பாவம்  களைந்து அவர்களை புனிதர்களாக மாற்றும் திருத்தலம் சுசீந்திரம் என்பது நமக்கு சூட்சுமமாக உணர்த்தப்பட்டு
உள்ளது.

முறையற்ற காமத்தால் அறிந்தோ அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி தங்கள் தவறுகளுக்கு பிராயசித்தம் பெற உதவும் அற்புதமான தலம் சுசீந்திரம்.

ஆனால், மனம் திருந்தி மீண்டும்
இத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டால்தான் பிராயசித்தம் முழுமை அடையும் என்பதை நினைவில் கொள்ளவும்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வ தில்லை. ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து பொருட்களையும் கருவறையில் இரவில் வைத்து விடுவார்கள்.அப்படி இரவு நேர பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர்,மறுநாள் பூஜை செய்ய பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார்.

முன்தினம் பெருமாள்
ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர், மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு அர்ச்சனை செய்ய வருவார்.

காரணம்

இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம
பூஜையில் தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம். முன்தினம் வைத்த பொருள்கள்  மறுநாள் மாறுதல் அடைந்திருக்குமாம்.

எனவேதான் இந்த அர்ச்சகர்
மாறுதல். ‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்து இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருக்கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை திருத்தலம் தான். நினைத்தாலே முக்தியைத் தரும் ஆலயம் அல்லவா அது.ஜோதி ரூபனாய் ஆதியும்,அந்தமும் இல்லாமல் உயர்ந்து நின்ற சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் காண முடியாமல் விஷ்ணும்,
பிரம்மனும் திணறிப் போயினர்.அவர்களில் திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக,
ஈசன் அருள்புரியும் இடமே சுசீந்திரம். இங்கு இறைவன் மும்மூர்த்திகளின் வடிவமாக தாணுமாலயன் என்ற பெயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர்
இணைந்த உருவமே தாணுமாலயன்.

அத்ரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாதேவிக் காகவும், ஈசன் இங்கு மும்மூர்த்திகளாய் காட்சி தருகிறார்.

இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும்,அதன் மேல் ஆதிசேஷனும் காட்சி யளிக்கின்றன.

 தாணுமாலய சுவாமி கருவறை கோஷ்டத்தின் பின்புறம், உள்பிரகாரத்தில் மரச் சட்டத்தினால் ஆன 27 நட்சத்திர தீபக் குழிகள் உள்ளன.கார்த்திகை திருநாள் மற்றும் பவுர்ணமி
நாட்களில் தூய பசு நெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு, 27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.கருவறை கோஷ்டத்தைச்
சுற்றியுள்ள பிரகாரத்தில் மூடு விநாயகர், துர்க்கை, அமர புஜங்கப் பெருமாள், சங்கரநாராயணர், சண்டேஸ்வரர், நடராஜர் சன்னிதிகள் உள்ளன

இத்தல
மூடு விநாயகரையும், சங்கரநாராயணரையும் தொடர்ந்து 8 பவுர்ணமி நாட்கள், 5 அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சுப காரியத் தடைகள் அகலும்.ஆலயம் 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் முதலில் நந்தீஸ்வரரையும்,
சிதம்பரேஸ்வரரையும் வழிபடலாம். பின்னர் கிழக்கு பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசன்னிதி எனப்படும் கொன்றையடியில் உள்ள
மும்மூர்த்திகளை வழிபட வேண்டும். இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின்
மாதவிலக்கு பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.

நீலகண்ட விநாயகரின் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும்,நவக்கிரகங்களும் உள்ளன. இந்த வசந்த மண்டபத் தூணில் கால பைரவர் சிற்பம்
உள்ளது. இங்கு 8 செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும்.தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.இத்தலத்தில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.இவருக்கு
வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி
வழிபடுவது உகந்தது.சுசீந்திரம் ஆலயத்திற்குள் பெருமாள் சன்னிதியும் உள்ளது.பௌர்ணமி நாட்களின் இரவில் இங்கு உள்ள சிறு கட்டுமலை மேல் உள்ள கைலாசநாதரை அங்கு உள்ள பலகணி வழியாக தரிசித்து வழிபட்டு,பின்பு அந்த
கட்டுமலையை கிரிவலமாய் முறை வந்து ,அதன் பின்னர்
கைலாசநாதருக்கும்,தாணுமாலய சுவாமிக்கும் தீபம் ஏற்றி வழிபட திருக்கயிலாயம் வலம் வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் அன்பர்கள்.இவ்வாலய தெப்பக்குளத்தின் வடகரையில் முன் உதித்த நங்கை என்னும் ஆதிபராசக்தி ஆலயமும், அதனை அடுத்துள்ள திருவாவடுதுறை திருமடத்தில் காலபைரவர் தனி ஆலயமும் உள்ளது. இங்குள்ள முன் உதித்த நங்கை அம்மனும், காலபைரவரும்தான், மும்மூர்த்தி தலமான சுசீந்திரம் திருத்தலத்தின் காவல் தெய்வங்களாவர். சுசீந்திரம் பாவம்,சாபம் போக்கும் திருத்தலம் என்பதின்
அடையாளமாக இங்கு தனி சன்னதியில் ராமேஸ்வரத்து மகாதேவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தெய்வீகத்தன்மையை பறைசாற்றுகிறது என்றால்
வியப்பில்லை.

இங்கு அர்த்தஜாமபூஜை இன்றளவும் அனுதினமும் இந்திரன் செய்துவிட்டு தினமும் பூஜையின் நிறைவில் விநாயகரை வழிபடுவாராம்.அதற்கேற்ப
இத்தலத்தில் விநாயகர் ஆலய இறுதி சுற்றில் வெளிபிரகாரத்தில் ''இந்திர விநாயகர்'' என்னும் பெயரில் உள்ளது சிறப்பு.இந்திரனுக்கு அவன் உடம்பில் உள்ள பெண்குறிகள் அனைத்தும் விலகி புனிதமாக இத்தலத்தில் வழிபட வழிகாட்டியது பிரகஸ்பதி என்கிறார்கள்.எனவேதான் இத்தலத்தில் முதலில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டே பக்தர்கள் ஆலய தரிசனம் செய்கிறார்கள் என்பது
வியக்கத்தக்கது.

இத்தலத்தில் பிரதோஷ வலத்தின்போது சிவபெருமானுடன் மோகினி வடிவில் மஹாவிஷ்ணுவும் வலம் வருகிறார் என்பது சிறப்பாகும்.

நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் உள்ளது..

     திருசிற்றம்பலம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top