சக்கரத்தாழ்வார் ஜயந்தி
கோபக்கார முனிவர் துர்வாசர். அவரை மதிக்காத இந்திரன் மீது கடும் சினம் கொண்டார். அவரின் சாபத்துக்கு ஆளானான் இந்திரன். இதனால், தேவர்கள் வலிமையை இழந்து தவித்தனர். அசுரர்களின் கை ஓங்கியது. அவர்கள் ஆட்டம் கண்டு கிடுகிடுத்துப் போனார்கள்.
இழந்த வலிமையைப் பெற, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முனைந்தார்கள் தேவர்கள். அசுரர்கள் மட்டும் என்ன... இதையெல்லாம் தெரிந்துகொண்டு, அவர்களும் அந்த முனைப்பில் இறங்கினர்.
மேரு எனும் மந்திரமலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். ஒருகட்டத்தில், நீண்டநெடிய நேரத்துக்குப் பின்னர், வாசுகிப்பாம்பு களைத்துப் போனது. அப்போது, காளக்கூடம் எனும் விஷத்தைக் கக்கிற்று. அதன் வெம்மை, அங்கே இருந்தவர்களைப் பொசுக்கியது. அவர்களைக் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அது, தொண்டைப் பகுதியில் நின்றது. விஷத்துக்கு நீலம் என்றும் பெயர் உண்டு. எனவே சிவனாருக்கு, நீலகண்டன் எனும் பெயரும் அமைந்தது.
இதையடுத்து, உச்சைச்ரவஸ் என்கிற குதிரை பாற்கடலில் இருந்து வெளிவந்தது. அத்துடன் பல பொருட்களும் வர, அமிர்தமும் வந்தது. இதனை அடைவதற்கு, தேவர்களும் அசுரர்களும் கடும் சண்டையிட்டார்கள். அப்போது தேவர்களுக்கு பலம் சேர்க்க நினைத்தார் மகாவிஷ்ணு. மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை அழகால் மயக்கினார். விரட்டியடித்தார். தேவர்களுக்கே அமிர்தம் கிடைத்தது. தேவர்களும், முனிவர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் மோகினி. அந்த அவதாரமெடுத்த மகாவிஷ்ணு.
மோகினி அவதாரத் தொடர்பு கொண்ட தலங்கள் வெகு குறைவு. அப்படித் தொடர்பு கொண்ட திருத்தலம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. அந்த ஊருக்கு திருமோகூர் என்று பெயர்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் திருமோகூர் திருத்தலத்தை அடையலாம். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீகாளமேகப் பெருமாள். மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது.
தாயார்... மோகனவல்லித் தாயார். அழகு ததும்ப அமர்ந்திருக்கிறாள். மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் இவளின் திருநாமம் இருப்பதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். கருணையும் கனிவும் கொண்டு காட்சி தரும் தாயாரை, பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
சக்தி வாய்ந்த திருத்தலம் இது. மதுரை, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வாரந்தோ றும் சனிக்கிழமையில் இங்கு தொடர்ந்து வருவதை யும் தரிசிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கி றார்கள். தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், நல்ல உத்தியோகம் இல்லையே என்று ஏங்கிக் கலங்குபவர்கள், வீடு வாசல் அமையவில்லை என்றும் கடன் தொல்லையில் இருந்து மீளவே முடிய வில்லையே என்றும் வருந்துபவர்கள் வாரம் தவறாம ல் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கைகூடும்; நல்ல வேலை கிடைக்கும்; இழந்த செல்வங்களைப் பெறலாம்; கடன் தொல்லை யில் இருந்து மீளலாம் என்பது ஐதீகம்.
காளமேகப் பெருமாளும் மோகனவல்லித்தாயாரும் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தின் இன்னொரு நாயகன்... சக்கரத்தாழ்வார். மிகுந்த சக்தி வாய்ந்த வர். சனிக்கிழமை தோறும் இவரை தரிசித்துப் பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
திருமோகூர் காளமேகப் பெருமாளை தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் கிடைப்பது நிச்சயம்