குரு பூர்ணிமா

0

வியாச ஜெயந்தியை குரு பூர்ணிமாவாக பாரத நாட்டில்  காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர்.

குரு என்பதற்கு "இருளை நீக்குபவர்" என்று பொருள். அறியாமை என்ற அஞ்ஞான இருளை நீக்கி உள்ளத்துள் ஒளி ஏற்படுத்தும் குருவினை வழிபடும் நாளாக குரு பூர்ணிமா அமைந்திருக்கிறது.

நமக்கு யார் குருவாக இருக்கிறாரோ (அல்லது எவையெல்லாம் குருவாக இருக்கிறதோ) அவரை வழிபட்டு அவர் திருவருள் பெறும் நாளாக குரு பூர்ணிமா அமைகிறது.

குரு இப்படித்தான் அமைவார் என்றில்லை. குலகுருவாக இருந்த அருணந்தி சிவத்திற்கு அவரது மாணாக்கராகிய மெய்கண்டார் குருவாக உபதேசம் செய்தார்.

சாரதா அம்மையாருக்கு  அவருடைய கணவர் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரே குருவாக இருந்தார். ஆனாலும் தன் மனைவியை அம்பாளின் வடிவமாக வணங்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

பரதனுக்கு தன் அண்ணனுடைய பாதுகைகளே குருவாக வழி நடத்தியது.

தாய் வீட்டிற்கு சென்றிருந்த  மனைவியைப் பிரிந்து வாழ முடியாமல், கொட்டும் மழையில் அவரது வீட்டின் பின்புறமாக ஏறி வந்தவரைப் பார்த்து கேட்ட கேள்விகளே துளசிதாசரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரது மனைவி மமதாவே குருவானார்.

ஆதிசங்கரர் நதியின் மறுகரையில் இருந்த பத்மபாதரை அழைக்க, ஆற்று வெள்ளத்தை சட்டை செய்யாது குறுக்கே நடந்து வந்தவரை தாமரை மலர்கள் தாங்கியதால் "பத்மபாதர்" என்ற பெயர் பெற்றார்.

யாக்ஞவல்கியரிடம் அவர் மனைவி மைத்ரேயி, தானும் பிரம்மத்தை அடைய விரும்புவதாகவும், தன்னை சிஷ்யையாக ஏற்று உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்ட அவ்வாறே யாக்ஞவல்கியர் ஏற்றுக் கொண்டார். இங்கே கணவரே குருவானார்.

வீரசிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் குருவாக இருந்தார். அரசை ராமதாசருக்கு சமர்ப்பித்து தான் ஒரு சேவகனாகவே செயல்படுவதை வீரசிவாஜி உறுதிப் படுத்தினார்.

ஒருமுறை, ஒரு ஜென் துறவி யாத்திரை சென்று கொண்டிருந்தார். அமாவாசை இரவு, தண்ணீர் தாகமெடுக்க, தண்ணீரைத் தேடி இரவு முழுவதும் இருட்டில் அலைய, இறுதியில் காலில் ஏதோ பாத்திரம் போன்று ஒன்று தட்டுப்பட, அதில் தண்ணீர் இருந்தது. அதை மடமடவென்று குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டார். பிறகு அசதியில் அங்கேயே படுத்து உறங்கினார். காலையில் சூரியன் உதித்தபின் எழுந்து பார்த்த போது, அவர் படுத்திருந்த இடம் ஒரு இடுகாடு. முந்தைய இரவு அவர் நீர் குடித்த பாத்திரம் சரியாக காய்ந்திராத ஒரு மண்டை ஓடு, மழையின் போது அதில் தேங்கியிருந்த நீரைத் தான் முந்தைய அமாவாசை இரவில் குடித்திருந்தார். இப்போது அதை உணர்ந்தவுடன், அவருக்கு என்னவோ செய்தது. பைத்தியம் பிடித்தது போலானார். தன்னிலையை இழந்து தவித்தார். அப்போது சட்டென சிந்தித்தார், நேற்று இரவு இந்த நீரைக்குடித்த பின் பல மணிநேரம் உறங்கினேன். ஒன்றும் நடக்கவில்லை. இப்போது மண்டை ஓடு என்று தெரிந்தபின் ஏன் உள்ளம் தவிக்கிறது என்று சிந்திக்க ஆரம்பித்தார். பிரச்சனை எங்கு துவங்குகிறது என்று சிந்தித்தார், உடன் அவருக்கு ஞானம் பிறந்தது. அவருக்கு குருவாக இருந்தது மண்டை ஓடு!

காவிக் கொடி சிலருக்கு, நூல்கள் சிலருக்கு, வாள் சிலருக்கு, கலசம் சிலருக்கு என பல்வேறு சின்னங்களும் குருவாக அமைகிறது.

பகவான் ரமண மகரிஷி சொல்வது "அவரவர்களின் ஆத்மாவே அவர்களுக்கு குருவாக அமைகிறது".

குரு ஏன் தேவைப்படுகிறார்?

திருமந்திரம் சொல்வது
"குருவழியாய குணங்களில் நின்று
கருவழியாய கணக்கை அறுக்க"

அதாவது ‌குருவின் உபதேசங்களின் வழி  நின்றால், நம் பிறவிக்கு காரணமான வினைகளை அறுக்க முடியும்.

அவ்வாறு குருவழி நின்று வினைகளை அறுத்த பின் விளைவது என்ன?

"கறுத்த இரும்பே கனகமதானால்
மறித்து இரும்பாக வகையதுபோலக்
குறித்த அப்போதே குருவருள் பெற்றால்
மறித்தும் பிறவியில் வந்து அணுகாரே"

இரும்பினை ரசவேதியில் தங்கமாக மாற்றிய பின், அது மீண்டும் இரும்பாகாது. அதுபோல குருவின் அருளால் ஆன்மா பக்குவம் அடைந்தால் மீண்டும் பிறவி எடுக்காது.

எனவே பழவினைகள் அறுபடவும், ஆன்மா பக்குவம் அடையும், பிறவிப் பிணி நீக்கவும் குரு பூர்ணிமா அன்று குருவினை வழிபட்டு திருவருள் பெறுவோமாக!!

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top