கங்கை

0
உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கை தான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகி விடும் என்பது சாஸ்திர நம்பிக்கை.
எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.

இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும் தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள் தான் என்கின்றன

சாஸ்திரங்கள்!

தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள். அதனால் நரக சதுர்த்தசியன்று ஸ்நானம் செய்வதை, 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?'' என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.

இந்துக்களின் இல்லங்கள் தோறும் பூஜை அறையில் கண்டிப்பாக ஓரிரண்டு கங்கைச் செம்புகள் இருக்கும். (அப்படி இல்லாவிட்டால் அவசியம் அது இருக்கும் படி செய்ய வேண்டும்). அது வீட்டின் புனிதத்துக்கும், தோஷங்கள் நீங்குவதற்கும், குறைகள் தீர்வதற்கும் வீட்டிலிருக்க வேண்டிய அவசியமான செல்வம். அந்தப் புனித கங்கையின் தோற்றம், ஓட்டம், தேக்கம், சங்கமம் ஆகியன குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

இமயமலையின் பனி சூழ்ந்த கோமுகி என்னும் பகுதியே கங்கையின் பிறப்பிடம் என்கிறார்கள். அங்கே கங்கோத்ரி என்று பெயர் பெறுகிறது. இந்த இடம் மிகச் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப்பிடம் யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கங்கை தோன்றும் இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. பக்தர்கள் இதைத்தான் தரிசித்து வழிபட்டு திரும்புகிறார்கள்.
அறிவியல் ஆராய்ச்சியின் படி கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுட இணைந்த பின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது.

கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. இதுவே கங்கைக்கு முதல் கோவில் என்பர்.
அதையடுத்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து ஹரித்வாரை அடைகிறது. இங்கு கங்கை ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை மேற்கொள்கிறது.

கிழக்கு நோக்கி ஓடும் கிளைகள் ஹாலதினி, பவானி, நளினி என்று பெயர் பெறுகின்றன. அதன்பின், 785 கிலோமீட்டர் தூரம் பயணித்து அலகாபாத் நகரை அடைகிறது.

இதற்கிடையில் கங்கை பல காரணப் பெயர்களையும் பெறுகிறது. அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது.

ஒருமுறை பார்வதி தேவி சிவ பெருமானுடன் விளையாடும் போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்ட தாம். அந்த மையை சிவ பெருமான் கங்கையில் கழுவும் போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்டதாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது.
கயிலையிலிருந்து மானசரோவர் வழியாக கங்கை நதி காளிபோல் குதித்துக் கொண்டு செல்வதால் "காளிகங்கா' என்று பெயர் பெற்றது.

உத்திரப் பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது ராம்கங்கா என்றும்; பித்தோராகர் மாவட்டத்தில் ஓடும்போது ஜடகங்கா என்றும்; ஹுமாயூன் மண்டலின் தார்குலா, முன்சியாரி கிராமத்தை அடுத்து ஓடும்போது வெண்மையாகக் காட்சி தருவதால் கோரி கங்கா எனவும்; அல்மோரா மாவட்டத்தில் பைஜ்நாத் திருத்தலத்தின் அருகே செல்லும்போது கருட கங்கா எனவும் பெயர் பெறும் கங்கா நதி, ஜம்முவைக் கடந்து வைஷ்ணவி கோவில் அருகே செல்லும் போது பாண கங்கை என்று பெயர் பெறுகிறது.

வைஷ்ணவி தேவி, தன் கூந்தலை கங்கை நதியில் அலசியதால் "பால்கங்கா' என்றும் பெயர் பெற்றது. இந்தி மொழியில் "பால்' என்றால் கூந்தல்.
கேதார்நாத் திருத்தலத்திற்கு அருகே பாய்ந்தோடும் நதியை துக்தகங்கா என்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே பேடாகாட் என்ற இடம் உள்ளது. இது பிருகு முனிவர் தவம்புரிந்த இடமாம். இங்கு செல்லும் கங்கையை வாமன கங்கை என்பர். நர்மதை நதிக்கரையில் சூலபானேஸ்வரர் என்ற திருத்தலம் உள்ளது. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோக்கடி என்ற கிராமத்தின் அருகில் நர்மதையுடன் கலக்கும் கங்கையை மோட்ச கங்கா என்கிறார்கள். இப்படி பல பெயர்களைப் பெற்ற கங்கை நதி எங்கே எவ்விதம் உருவாகிறது என்பது இன்று வரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. பலமுறை முயன்றும் அறிய முடிய வில்லை.

கோமுகியில் தொடங்கிய கங்கை வங்காளத்திற்குச் சென்று கடலில் கலப்பது ஏன் ? நேரே தென் திசை நோக்கி வந்திருக்கலாமே ! வடக்கை விட தெற்கு தாழ்வான பகுதிதானே ? பிறகு ஏன் கிழக்கு நோக்கி ஓடினாள் ? அதற்கும் புராணக் கதை உண்டு.
அப்போது பூவுலகில் ரகுவம்ஸத்தில் பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஸ்ரீராமனின் மூதாதையர்களில் ஒருவன் பகீரதன். இவன் காலத்தில், தேசத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில் கபில முனிவரின் சாபத்தால் சகர மன்னனின் அறுபதாயிரம் குழந்தைகளும் சாம்பலாகி விட்டார்கள் என பகீரதனுக்கு தெரிய வருகிறது.(அந்த இடம் வங்காளத்தில் {இன்றைய கோல்கத்தா} உள்ளதாகச் சொல்லப்படுகிறது. )
சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தரவும், நாட்டின் வறட்சி நீங்கவும் பகீரதன் விரும்பினான்.

அதற்காக, பவித்திரமான கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயன்றான். எனவே, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற் கொண்டான். அதன் பலனாக நாராயணன் பிரத்யட்சமானார். அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணி புரியும் கங்கா மாதாவை, கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு இமயத்தின் சிகரங்கள் வழியே ஓடி, பூமியைக் குளிரச் செய்து, தன் மூதாதையர் அஸ்தியைக் கடலில் கரைக்கும் இடத்தில் அவள் சங்கமம் ஆகும் படி அருள்பாலிக்க, பகீரதன் வரம் கேட்டான். நாராயணனும் தந்தருளினார்.

புனித கங்கை ஆகாச கங்கையாக, அதிவேகமாக புறப்பட்டாள். இமயத்தைத் தாண்டி அவள் பூமியில் இறங்கும் போது அவள் வேகத்தைத் தணிக்காவிட்டால், நாடு நகரமெல்லாம் மூழ்கிவிடும் என்று பகீரதன் பயந்தான். அவள் வேகத்தைத் தடுக்க வல்லவர், சிவபெருமான் ஒருவரே என்றுணர்ந்து, சிவனைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன்.

உலகைக் காக்க ஈஸ்வரன் தோன்றி, தன் சடையை விரித்து, கங்கையை அதில் தாங்கி, அவள் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பாயச் செய்தார். (சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. கங்கா அஷ்டோத்திரத்தில் கங்கையை விஷ்ணு பத்னி என்றும், சிவ சகோதரி என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது).
இதனால் ஈசன் " கங்காதரன் " என்று அழைக்கிறார்கள்.
விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் நந்த பிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் ருத்ர ப்ராயக் என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் பாகீரதி என்று பெயர் பெற்றாள்.

பகீரதனிடம் கங்காதேவி, ''தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும், எந்த மார்க்கமாகத் தன் தாரைகள் ஓட வேண்டும்?'' என்றும் கேட்டாள். பகீரதன் தன் தேரில் ஏறி, 'தாயே! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட்டான்.

கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. ரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை. எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான். சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். காரணம், அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம் தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன.

சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும் போது, அவர்களைத் தரிசித்து ஆசி பெறாமல் சென்றது தவறு என்று பகீரதனுக்குப் புரிந்தது. தன் தவத்துக்கு இரங்கி பூமிக்கு வந்த கங்கை தன்னைவிட உயர்ந்த தபஸ்விகளின் தரிசனத்துக்காகத் தங்கிவிட்டாள் என்பதையும் உணர்ந்தான் பகீரதன்.

சப்த ரிஷிகளையும் வணங்கி, பூஜித்து, அவர்கள் அனுமதியுடன் கங்கையை தன்னுடன் வரும்படி வேண்டினான். இப்போது கங்கை முன்னே செல்ல, அவள் செல்ல விரும்பிய வழியில் ரதத்தைச் செலுத்தினான் பகீரதன்.

இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும்போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கை.

இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும் போது, கங்கா தேவி தன் ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினாள். பீகாரிலுள்ள பாகல்பூர் என்ற ஊருக்கு அருகில், சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் தென்கிழக்காக ஓடிக் கொண்டிருந்த கங்கை திடீரென திசை திரும்பி, மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள்.

அப்போதும் பகீரதன் தன் முயற்சியில் தளராமல், சிவபெருமானையும் கங்கையும் பிரார்த்தித்து, தான் பெற்ற வரத்தின்படி வங்கக்கடல் வரை வரும்படி கங்கையை அழைத்தான். அப்போது சிவ பெருமான் தோன்றி, எல்லா யுகங்களிலும் கங்கை உத்தரவாகினியாகத் திரும்பிய இடத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பரிசுத்தமான கங்கையை பூஜித்து, காவடிகளில் சுமந்து செல்வார்கள். அவர்கள் பல காத தூரம் நடந்து சென்று, தேவ்கர் எனும் இடத்திலுள்ள சுயம்பு லிங்கமான வைத்தியநாதருக்கு அந்த நீரை அபிஷேகம் செய்து, புண்ணியம் பெறுவார்கள் என்று கங்கைக்கு ஒரு வரமளித்தார்.

ஸ்ராவண மாதத்தில் { நம்ம ஊர் ஆடி மாதம் } பல லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச் சுமந்து ' பம் பம் போலே' என்று சொல்லிக் கொண்டு, சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பக்தி பரவசமான காட்சி.
தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு, பகீரதன் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி, வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை. பூமி குளிர்ந்தது. பகீரதன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்தான் என்பது புரண வரலாறு.
கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) விளங்குகிறது.

கங்கையின் மகத்துவம் குறித்து வால்மீகி முனிவர், "கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ மீனாகவோ புழுவாகவோ ஜென்மமெடுத்தால் கூட போதும்' என்கிறார்.
மகாபாரதம், "கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க்கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்' என்கிறது.

மகாகவி காளிதாஸ், "கங்காதேவியே, எமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்கு தான் இருக்கிறது' என்கிறார்.
"கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக்கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத்தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர்களுக்கு முக்தி எளிது' என்கிறார் ஆதிசங்கரர்.

மகாகவி பாரதியார் காசியில் அனுமன் காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தன் மாமன் வீட்டுக்குச் செல்லும்போது நாஸ்திகனாக இருந்தார். அவர் கங்கை நதியில் நீராடிய பின், அதன் சக்தி பாரதியாரை ஆஸ்திகனாக மாற்றிவிட்டது என்று வரலாறு சொல்கிறது. அவர் கங்கை நதியைப் புகழ்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே.

கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப்புக் கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடி வைத்துவிட்டால் வருடக்கணக்கில் கெடாது. மேலும், சாதாரணமாக எலும்புகள் தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நதியில் இடப்படும் எலும்புகள் கரைந்து விடும். ஆகையால் தான் காசியில் மணிகர்னிகா காட்டில் தகனம் செய்யப்படும் சடலங்களின் எலும்புகள் கங்கை நதியில் இடப்படுகின்றன.

சாதுக்கள், பிரம்மச்சாரிகள், குழந்தைகளின் சடலங்களை தகுந்த முறையில் பூஜித்து துணியில் சுற்றி கங்கை நதியில் விட்டு விடுவார்கள். சில நாட்களில் அவை கரைக்கப்பட்டு நீருடன் கலந்துவிடும். அதனால் தான் கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதில்லை. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

எங்கே வசித்தாலும் கங்கையின் பெயர் சொன்னால் போதும்- எல்லா பாவங்களும் அகலும்; புனிதம் சேரும்.

பொதுவாக நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

கங்கா கங்கேதியோ ப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் சச்சதி.

இத்தனை பெயர்களையும் புகழையும் புனிதத்தையும் பெற்ற கங்கையானவள், மக்கள் தன்னிடம் கரைத்த பாவச் சுமைகளைப் போக்கிக் கொள்ள தமிழகத்திற்கு வருகிறாள். அத்தலம் மாயூரம் ஆகும். இங்கு வரும் காவேரி நதியின் நந்திக்கட்டத்தில், துலா மாதமான ஐப்பசியில் நீராடி புனிதமடைகிறாள்.

இங்கு ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாத அமாவாசையில் நீராடினால், அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top