துளசி விரத வழிபாடு

0

நலங்கள் பல தரும் துளசி விரத வழிபாடு


கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித் தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமர வைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top