ஆனி மாதம் :
சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும்.
ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.
ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன.
ஆனியில் 32 நாட்கள் :
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.
ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?
ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
ஆனி மூலம் நட்சத்திரம் :
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்தினைப் பெற்றிருப்பர். அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது.