ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம்பெருமானே.
முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்..
நந்தி (காளை) என்பவர் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். சைவ புராணங்கள் படி இவர் நாத சைவத்தின் எட்டு சீடர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஐவகை நந்திகளின் சிலைகள் அமைந்திருக்கும்.
*மந்திரம்*
ஓம் தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார். முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.
சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது. சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.
ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.
அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.
பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.
*நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்*
சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது. தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.
சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.