தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது, அவரை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் இல்லங்களை விளக்குகளை ஏற்றி வரவேற்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தை நினைவு கூறும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளாகவும் தீபாவளி கூறப்படுகிறது. மக்களுக்கு நரகத்தின் அனுபவத்தை வழங்கியதாலேயே அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. அத்தகைய நரக அனுபவத்தை வழங்கிய அசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை, மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.
கொண்டாடும் முறை
தீபாவளி தினத்தன்று, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கங்கா குளியல் என்றழைக்கப்படும் குளியலை முடித்தவுடன் வீட்டில் செய்த பலகாரங்களை சாமிக்கு படைத்தும், வாங்கிய புத்தாடைகளை சாமிக்கு முன்பு வைத்து வணங்கியும் வழிபட வேண்டும். பின்னர், புத்தாடை உடுத்து பட்டாசு வெடித்து, பலகாரங்களை உண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக சொந்த பந்தங்களுடன், நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
வீட்டு அலங்காரம்
'தீபங்களின் திருவிழா' என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நாளில் மண் விளக்குகள் ஏற்றி வீட்டை அலங்கரிப்பர். மேலும், தீபாவளியின் முக்கிய அலங்காரம், வீட்டு வாசலில் வண்ணங்கள் நிறைந்த கோலமிடுவது தான். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களுக்கு பரிசு, பழங்கள் மற்றும் இனிப்புகளுடன் தீபாவளியில் வாழ்த்துவது ஒரு பொதுவான நடைமுறையாகும்.
வழிபாட்டு முறை
லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் செய்வதுண்டு. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான வங்காளம் போன்ற நாடுகளிலும் காளி பூஜையும் சிறப்பு வாய்ந்தது. மேலும், தமிழகத்தில் நரக சதுர்த்தசி என்றும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் விஷேசமான ஒன்று.