இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறைகள் பற்றிய பதிவுகள் :
   
நம்மை பொறுத்தவரை இறைவனை வழிபடுவது என்பது கைகூப்பி வணங்கும் ஒரு முறை என்பதாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருவர் ஆலயம் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகையிலான வழிமுறைகளை உள்ளன. அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும். அப்போது இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும்.

அந்த ஒன்பது வழிமுறைகளைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

கேட்டல் :

இந்த வழிபாட்டு முறைக்கு நாம் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ‘கற்றிலன் ஆயினும் கேட்க..’ என்றும், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்றும் திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினாலே போதுமானது. இறை வனைப் பற்றிய பெருமைகளையும், புகழையும் கேட்டு, அவன் வசம் ஆகும் முறையே இந்த ‘கேட்டல்’ வழிபாட்டு முறை. ஆகையால் இறை வனைப் பற்றி பலவற்றையும் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். 

கேட்பது என்பது எளிது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஒருவர் சொல்வதை பொறுமையாக, தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக அறிந்தவர்கள் சொல்லும் நல்லதைக் கேட்க முயற்சிக்க வேண்டும். அதனால் தான் வழிபாட்டு முறைகளில், ‘கேட்டல்’ முதலிடம் பெறுகிறது.

பாடுதல் :

கேட்டல் வழிபாட்டிற்கு அடுத்தபடியாக இருப்பது, இறைவனைப் பாடி வழிபடும் முறை. இறைவனைப் பாடி வழி படுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ‘பாடும் பணியில் என்னை பணித்தருள்வாய்’ என்கிறார் குமரகுருபர சுவாமிகள். அந்த அளவுக்கு இறைவனை பாடும் வழிபாட்டு முறை சக்தி மிக்கதாக இருக்கிறது. இசையால் இறைவனை ஈர்த்து, அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். 

அப்படி தங்களின் பாடலால், இறைவனை தன் வசம் ஈர்த்தவர்களில் நால்வர் எனப்படும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் மிகப்பெரிய சக்தி உண்டு. அப்படிப்பட்ட பாடலின் வாயிலாக நாமும் இறைவனைப் பாடி அவனருளைப் பெறுவோம்.

நினைத்தல் :

இறை வழிபாட்டில் மூன்றாவது நிலை, ‘நினைத்தல்’. இறை சிந்தனையில் மூழ்குவது என்பது நினைக்கும் போது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு விஷயத்தை நினைக்கும் போது, ஓராயிரம் சிந்தனைகள் வந்து, முதலில் நினைத்ததை புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். 

சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவதே பெரிய விஷயம்தான். அப்படி இருக்கையில் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும், மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது என்பது மேலான ஒரு நிலைதானே. மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான ஒரு வழிபாட்டு முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருவடிதொழல் :

இந்த வழிபாட்டு முறையைப் பற்றி, திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார். ‘அறமாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்கு பவர்களைத் தவிர, மற்றவர்களால் பொருள், இன்பம் என்னும் பிறவிப்பெருங்கடலைக் கடக்க முடியாது’ என்பது வள்ளுவனின் வாக்கு. 

நாம் கடந்து போக வேண்டிய இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக் கடலில், நம்மை மூழ்கவிடாமல் காப்பது இறைவனின் திரு வடித்தொழுதல் மட்டும் தான். ஆகையால் திருவடிதொழல் என்னும் வழிபாட்டு முறை முக்கியத்துவம் பெறுகிறது. எந்த நிலையில் எப்படிப்பட்ட துன் பங்கள் வந்தபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்குச் சான்றாக விளங்குகிறார்கள்.

பூஜித்தல் :

ஐந்தாவது வழிபாட்டு முறையாக இருக்கிறது இறைவனை பூஜை, நைவேத்தியம் செய்து வழிபடும் முறை. இப்படித்தான் இறைவனை பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளையும் வகுத்து வைத்திருந்தாலும், எப்படி பூஜித்தாலும் அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவன் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வான் என்பது ஆன்மிகப் பாதையில் கரைகண்டவர்கள் சொல்லும் உண்மை.

அதற்கு சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் இருக்கும் உதாரணம் தான் கண்ணப்ப நாயனார். ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தவர்கள் மத்தியில், இறைவன் மேலான அன்பால் அவருக்கு பன்றி இறைச்சியையும், தன் கண்ணையும் கொடுத்ததின் மூலமாக இறைவனை பூஜிப்பதற்கு அன்பு ஒன்றே போதும் என்று நிரூபணம் செய்தவர்.

வணங்குதல் :

இறைவனை வழிபடுவதில் அடுத்த கட்டம் இது. பொதுவாக பலரும் பூஜித்தல், வணங்குதல், திருவடிதொழல் ஆகிய மூன்று வழிபாட்டுக்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் இருக்கிறது. இவை மூன்றுக்கும் மிக நுண்ணிய நூலிழை வித்தியாசமே உண்டு. இங்கு நாம் பார்க்கும் ‘வணங்குதல்’ என்ற வழிபாட்டு முறையை ‘தலைவணங்குதல்’ என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

திருவடிதொழல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குதலில் அகங்காரத்தை களைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ‘நான்’ என்ற ஆணவம் தான் அனைத்துக்கும் மூலகாரணம். அந்த ‘நான்’ என்ற அகந்தையை ஒழித்து, ‘எல்லாம் நீ’ என்ற பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை இது. ‘நான்’ என்னும் அகங்காரத்தை கைவிட்டால் ஒழிய, இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வழியே இல்லை என்பதைச் சொல்வதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சம்.

தொண்டு :

தன்னலம் கருதாது, புகழுக்காகவும், லாபத்திற் காகவும் அல்லாது, இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இயலாதவர்களுக்கும் தொண்டு செய்வதும் கூட இறைவனை வழிபடும் ஒரு மார்க்கமாகவே பார்க்கப்படுகிறது. தன்னலமற்ற தொண்டுக்கு சிறந்த உதாரணமாக ஆன்மிக மார்க்கமாக தொண்டாற்றிய திருநாவுக்கரசரையும், சமூக மார்க்கமாக தொண்டாற்றிய அன்னை தெரசாவையும் குறிப்பிடலாம். 

தள்ளாத வயதிலும் கூட கோவில்கள் தோறும் சென்று தொண்டு புரிந்தவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசர். அதே போல் கொல் கத்தா வீதிகளில் அவதிப்பட்ட தொழுநோயாளிகளுக்கெல்லாம் சேவை செய்து மகிழ்ந்தவர் அன்னை தெரசா. இறைவனை மகிழ்விக்க இதுபோன்ற சேவைகளைவிட உயர்வானது எதுவும் இல்லை.

அன்பு :

இறைவனை அன்பாக பார்க்க முடிவது ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு தன்மையாகவே சொல்லலாம். அன்பும், காதலும் இறைவன் மீது ஏற்படுவது ஒரு வித வழிபாடாகவே கருதப்படுகிறது. மீரா, ராதை போன்றவர்கள் இந்த அன்பின் எல்லையால் இறைவனை கட்டிப்போட்டவர்கள். 

அதைத் தான் ‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்கிறார் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளார். இறைவன் என்னும் மலையை எப்படி அன்பு என்னும் பிடியில் கட்டுவது? அது கற்பனை என்று தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறது இந்த வழிபாட்டு முறை.

ஒப்படைத்தல் :

கடைசி வழிபாட்டு முறை இது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்வது இதன் சிறப்பம்சம். இது மகான்களால் மட்டுமே ஆகிற காரியம் என்றாலும், ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக்கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வுநிலை.

இறைவனை அடையவும், அவனது பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது வழிபாட்டு முறைகளும் உங்களுக்கு உதவும். இதில் அவரவரர் இயல்புக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அதைக் கடைப்பிடிக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top