நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.
சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.
"வெல்" என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்" என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும்.
பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்" என்ற பெயரும் உண்டு.
வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது.
○வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.
முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.
வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.
மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க" என்று சொன்னால்; மனம் லேசாகி விடும்.
வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :
காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.
கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.
கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்