தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி.
மகாசங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.
வழக்கமான சதுர்த்தி தினங்களில் செய்யும் வழிபாடே சங்கடங்கள் தீர்க்கும் என்றால் மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும். குறிப்பாகக் கடன் பிரச்னைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்ற வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.
மாசி மாதத்தில் தேய்பிறையின் போது வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள், மிகவும் உன்னதமானது என்கிறது ஆகம சாஸ்திரம். இந்த மாசி சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் விநாயகரை தரிசித்து, ஸ்ரீகணபதிபெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்துவது நல்லது. முடிந்தால், பிள்ளையார் துண்டு சார்த்தி வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்.
விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அல்லது சுண்டல் பிரசாதம் செய்து நைவேத்தியம் படைத்து, பக்தர்களுக்கு விநியோகித்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்!
சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகத்தானை இன்று வழிபட்டால், தடைபட்ட நல்ல காரியங்கள் உடனே நடந்தேறும். சங்கடங்கள் யாவும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!
சங்கடஹர சதுர்த்தி நாளில், சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் அம்மன் ஆலயங்களிலும் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்து கொண்டால் நம் சங்கடங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!