பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று வெகுவிமரிசையாக அனைத்து கோவில்களிலும் திருமண வைபவ பூஜைகள் நடைபெறும். குறிப்பாக முருகன் கோவில்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறுவதால் அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிறவிப் பிணிகள் நீங்கும் என்கிற ஐதிகம் உண்டு.
முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் அருள் புரியும் பங்குனி உத்திர நாளன்று முருகன் வழிபாடு செய்வது தடைப்பட்ட திருமணத்தை கைகூட செய்யும். இன்றைய நாளில் முறையாக விரதம் இருப்பவர்களுக்கு வெகு விரைவிலேயே மனதிற்கு பிடித்தவரை மணம் முடியும் யோகம் வரும் என்பது நம்பிக்கை.
முருகன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். கோவில்களுக்கு தேவையான அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்தால் சிறப்பான பலன்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய நாளில் கோவிலுக்கு கட்டாயம் சென்று இறைவனை தரிசிப்பது, வீட்டில் குலதெய்வம் வழிபாடு செய்வது போன்றவற்றை செய்யும் பொழுது நமக்கு பிறவிப் பிணிகள் அனைத்தும் நீங்கும். மேலும் முன்ஜென்ம கர்மாக்கள் கழிந்து விடுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
பெரும்பாலான தெய்வங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று திருமணம் புரிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இன்னாளில் கன்னிப் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் பங்குனி உத்திர நாளன்று முருக வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும். இன்று மாலை 6 மணி வரை உத்திரம் நட்சத்திரமானது நடைபெறுகிறது.
இறை வழிபாடு செய்ய நினைப்பவர்கள் பங்குனி உத்திரம் முடியும் முன்னரே செய்துவிடுவது நல்லது. காலையிலேயே பூஜைகள் அனைத்தையும் செய்து விடலாம் அல்லது மாலை 5 லிருந்து 6 மணிக்குள் பூஜைகள் செய்வது விசேஷமான பலன்களைக் கொடுக்கும். வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வைத்து வழிபடுவதும், வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன் தரும்.
ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை எந்த அளவிற்கு உங்களால் முடியுமோ! அந்த அளவிற்கு இன்றைய நாளில் தொடர்ந்து உச்சரித்து பாருங்கள். மேலும் கீழ்வரும் இந்த மந்திரத்தை பூஜையின் பொழுது 108 முறை உச்சரிக்க தடைப்பட்ட அனைத்து சுப காரியங்களும் கைகூடி வரும். உடல்நலம், மனநலம் போன்ற பாதிப்புகளும் நீங்க பெரும் என்பது ஐதீகம்.
முருகன் மந்திரம்:
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!
காலை முதல் மாலை வரை உபவாசமிருந்து முருகனுக்கு பிடித்த நைவேத்யங்கள் படைத்து திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் வாசிக்க நல்ல அதிர்வலைகள் உண்டாகும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை இந்நாளில் 108 முறை உச்சரிப்பவர்களுக்கு புது பலம் பெருகும். நினைவாற்றல் அதிகரிக்கும். பொதுவாகவே பவுர்ணமியின் பொழுது இறைவழிபாடு செய்வது என்பது நமக்கு விசேஷமான பலன்கள் தான் அதிலும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமியை வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் அபரிமிதமான. ஆகவே இந்நாளை தவறவிடாமல் கோவில்களுக்கு செல்வதும் வீட்டில் விரதமிருந்து வழிபடுவது செய்து பயனடையுங்கள்.