சுயம்பு வடிவாக அருள்பாலிக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே அம்மனாக வணங்கப்படுகிறது. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதாவது தெற்கில் கடலும், கிழக்கு மற்றும் மேற்கில் ஏராளமான தென்னை, பலா மரங்களும் உள்ளன. இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.
புற்று உடைந்து ரத்தம் வெளியேறியது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்போது பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடுவார்கள். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது பட்டது. புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அதில் ஒருவர் சாமி ஆடினார்.
அப்போது இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் புற்றில் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசப்பட்டது. உடனே ரத்தம் வருவது நின்றது. தொடர்ந்து சோழி ஜோதிடம் பார்ப்பவர்களை அழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சாமி ஆடியவர் கூறிய அனைத்தும் உண்மை என்றும், புற்றில் தோன்றியது அம்மன்தான் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் கூறியதாக கோவில் தொடர்பான புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
பக்தர்களின் நம்பிக்கை
குமரி மற்றும் கேரள மக்கள் பகவதி அம்மனை, தொடக்கத்தில் காளி தேவியாக வழிபட்டனர். நாளடைவில் கேரள மக்கள் வழக்கப்படி பகவதி அம்மனாக வழிபடுகின்றனர். அப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக அளித்தால் தலைநோய் குணமாகும். 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கழுத்துக்கு மேல் நோய்வாய்ப்பட்டவர்கள் அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வந்தவர்கள் முத்தப்பமும் படைத்து வழிபடுகின்றனர். எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனை மகிழ்விக்கும் சடங்கு ஒன்று செய்யப்படும். அதாவது மல்லி பூ, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து வகையான மலர்கள், மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை உள்பட அனைத்து விதமான பழங்கள், அடை மாவில் செய்த பலகாரங்கள், வடை, அப்பம் முதலானவற்றை செய்து கொண்டுபோய் கோவில் நடையில் வைக்கிறார்கள். இது தேவர்களை மகிழ்விக்கும் சடங்கு என்றும், அம்மனின் பரிவாரங்களை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் சடங்கு என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு கோவிலின் ஓலைகூரை ஓடாக மாறியுள்ளது. கோவில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மேடை, பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பொங்கல் வழிபாடு
கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பானது மாசி கொடை விழாவில் பொங்கலிடுவதுதான். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவர். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் கூட்டம் கோவிலில் நிரம்பி வழியும். வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் நாள் வலிய படுக்கையும், அதன் பின்னர் மஹா ஒடுக்கு பூஜையும் நடைபெறும். இதுதவிர ஆவணி அஸ்வதி பொங்கல், தங்கதேர் பவனி, பங்குனி மாதத்தில் பரணி கொடை விழா நடக்கிறது. மேலும் பரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை நிகழ்ச்சி நடக்கின்றது.
Tag:
#மண்டைக்காடு பகவதியம்மா கோயில்
#mandaikadu bhagavathi amman temple
#பகவதி அம்மன்
#bhagavathi amman