ராம நவமி 2021

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராம நவமி பற்றிய சிறப்பு பதிவுகள் :

பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இது மிக முக்கிய விரத நாளகா கடைப்பிடிக்கப்படுகின்றது.

சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தர். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு 2021 சித்திரை 9ம் தேதி (ஏப்ரல் 21) நவமி திதியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

ராம நவமி விரத முறை :

ராமனை நினைத்து, அவனின் அருளைப் பெறும் வண்ணம் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து இராமனை பூஜித்து வழிபடலாம். ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது அவசியம். ஸ்ரீ இராமருடன் சேர்ந்து, சீதாதேவி, லட்சுமணன், இராம பக்தரும் போர்ப் படைத் தலைமைப் பொறுப்பாளர் ஹனுமான் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

வீட்டில் ராம நவமியை கொண்டாடும் முறை:

சித்திரை வளர்பிறை திதி, புனர்பூச நட்சத்திரத்தில் ராமர் அவதார தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை வளர்பிறை நவமி திதியில் ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னரே புனர்பூசம் நட்சத்திரம் சென்று விடுகிறது.

இருப்பினும் ராம நவமி தினம், நவமி திதி வரக்கூடிய சித்திரை 8, 2021 ஏப்ரல் 21 கொண்டாடப்பட உள்ளது.

நவமி திதி தொடங்கும் நாள் ஏப்ரல் 20 இரவு 8.09 மணி முதல், ஏப்ரல் 21 இரவு 7.52 மணி வரை.

ஏப்ரல் 21 ம் தேதி முழுவதும் ராமனை அலங்கரித்து, பூஜித்து வழிபட ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

ராம நவமி பூஜை முறை

ஆலயத்திற்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தால் நாம் வீட்டிலேயே ராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

1. ராமபிரானின் சிலை வீட்டில் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து விட்டு, பின்னர் அழகாக அலங்கரித்து மலர்களை சூடுங்கள்.

2. உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்களை எல்லாம் உச்சரிக்கவும். எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை ‘ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்து இறைய் அருளைப் பெற்றிடுங்கள்.

3. ராமாயண கதைகளைப் படிக்கலாம், ராம கீர்த்தனைகளைப் பாடலாம்.

4. ராமனின் கீர்த்தனைகள், கதைகளைப் படிக்கும் போது அருகில் ஒரு சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே அனுமன் வந்து ராம நாமங்களையும்,கீர்த்தனைகளையும் கேட்பார், நமக்கு ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.

பூஜை எப்படி செய்வது ?

ராம நவமிக்கு முன் தினம் வீடு, பூஜை அறையை நன்றாக சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ராம நவமி அன்று காலையில் எழுந்ததும், குளித்து உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, ராமனை வழிபட்டு உங்களின் விரதத்தை தொடங்கலாம்.

ராமனுக்கு சூட்ட மாலை, பூக்களும், பூஜிக்க வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பழங்கள், வெற்றிலை பாக்கு, இனிப்புகள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ராமனின் திரு உருவம் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டவும்.

துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம்.

இராம நவமி அன்று இறைவனுக்கு பிரசாதமாக மோர், பானகம் படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தளவு இனிப்பு பதார்த்தங்களைத் தயார் செய்து பூஜைக்கு வைக்கலாம். பூஜை செய்ய ஏதேனும் ஒரு பதார்த்தம், பிரசாதம் வைத்து தொடங்கலாம்.

குறைந்தபட்சம் இறைவனுக்கு பொரிகடலை, சர்க்கரை கலந்து வைப்பதும், சிறிது சக்கரை கலந்த பால் வைப்பது நல்லது.

ஷோதாஷோபச்சார பூஜை செய்து வழிபடுதல் மிகவும் நல்லது. உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லி போற்றி வழிபடலாம்.

இறைவனுக்கு அலங்காரம் செய்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுங்கள்.

பூஜைகள் முடிந்த பின்னர் ராம பூஜைக்கு வைக்கப்பட்ட சந்தனம், குங்குமத்தை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றவர்களும் கொடுங்கள். அதே போல பூஜைக்கு பயன்படுத்திய பிரசாதங்கள், பதார்த்தங்கள் அன்புடன் அனைவருக்கும் அளித்துடுங்கள்.

ராம அவதாரத்தின் நோக்கம் :

 ராமாவதாரம் மிக புனிதமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ராம அவதாரத்தில் ராமன் மனிதர்கள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை தானே வாழ்ந்து காட்டினார். 

அதனால் நேர்மையை போதிக்கக்கூடிய, எந்த எதிர்மறை சிந்தனையும் இல்லாமல் நாம் கற்க முடியும் என்பதால் இராமாயணம் மிகவும் அற்புத நூலாக பார்க்கப்படுகிறது.

இராமாயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான, சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்கள் ஆழ்ந்து கிடக்கின்றன. நாம் இராமாயணத்தைப் படிக்கும் போதும், ராம நாமத்தை உச்சரிக்கும் போதும் நம் வாழ்வில் இருக்கும் தடை துயரங்கள் நீங்கி எல்லா நன்மைகளும் பெறலாம்,


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top