கஷ்டங்கள் தீர்க்கும் பஞ்சபுராண பாடல்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கஷ்டங்கள் தீர்க்கும் பஞ்சபுராண பாடல்கள் பற்றிய பதிவுகள் :

தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு.

இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாராயணம் செய்யலாம்.

விநாயகர் வணக்கம்

“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.”

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

“தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.”

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே.”

சேந்தனார் அருளிய திருவிசைப்பா

“கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.”

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு

“பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.”

சேக்கிழார் அருளிய பெரியபுராணம்

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.”

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

“ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.”

கச்சியப்பசிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்

“வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.”

திருஞானசம்பந்தர் அருளியது

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.”

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

Tag :

#panchapuranam

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top