வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி பற்றிய சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. 

ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி –சியாமளா நவராத்திரி

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி.

நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், ஒரு பட்சம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும், மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.

பரதேவதையான லலிதைக்கு உரிய நவராத்ரி காலம் இதுவே. லலிதா ரஹஸ்ய நாம ஸஹஸ்ரம் கொண்டு ஸ்ரீ லலிதாம்பிகைக்கு குங்குமார்ச்சனை செய்ய வேண்டும். வாசனை உள்ள ஸுகந்த புஷ்பங்களைக் கொண்டு ஸ்ரீ லலிதா அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும், பாயஸான்ன நைவேத்தியம் செய்தல் வேண்டும், லலிதா அஷ்டோத்ரம் சிந்திக்க வேண்டிய காலம் இது, ஸமஸ்க்ருதம் தெரியாதவர்கள் கூட ஸ்ரீ லலிதையின் சித்ர படத்தை அலங்கரித்து வைத்து இந்த ஒன்பது நாட்கள் தமிழில் உள்ள ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை சொல்லலாம். அபிராமி அந்தாதியை சொல்லி வணங்கலாம். ஸ்ரீ லலிதார்ப்பணமஸ்து.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top