ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.
ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் சொல்லலாம். சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட சொல்லலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.
செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய நாட்களில் சொல்வது சிறப்பு. ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தை ஸ்தோத்திரமாகவும் பாராயணம் செய்யலாம். அல்லது நாமாவளியாகவும் அர்ச்சனை செய்யலாம்.இது மகத்தான பலனைத் தரவல்லது. இந்த லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களும் சகல செல்வங்களையும் கொடுத்து அபாரமான நல்ல வாழ்வினை தரவல்லது.
வடமொழி எழுத்துக்கள் இருப்பதால் உச்சரிப்பு தவறாகிவிடுமோ தவறாக சொல்லிவிடுவோம் என்று பயப்பட வேண்டாம். அன்னை நம்மை குழந்தையாக பாவித்து நம் உச்சரிப்பை ஏற்றுக்கொள்வாள். பழக பழக உச்சரிப்பு கை கூடும்.சகஸ்ர நாமத்தை ஸ்ரீ கணபதியை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொண்டு தொடங்குதல் வேண்டும். சங்கல்பம் என்பது நமது வேண்டுதல்களை நிறைவேற்றித்தருமாறு அம்மனை வேண்டுதல் ஆகும்.
அர்ச்சனை செய்வதாக இருந்தால் அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் தொன்னை அல்லது சிறு கிண்ணம் வைத்து அதில் கட்டைவிரல் மோதிரவிரலால் குங்குமம் எடுத்து நம என்று முடியும் போது அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன் தங்களது பாராயணத்தின் பலன்முழுவதையும் தந்தருளி ஏற்றுக்கொள் என்று அன்னைக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமது அர்ச்சனையிலோ பாராயணத்திலோ பிழைகள் இருந்தால் மன்னித்தருள வேண்டி இதை சொல்லி முடிக்க வேண்டும்.
இந்த பாராயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபடுதல் சிறப்பு. மேலும் லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வந்தால் மிகச்சிறப்பு ஆகும்.
அம்மனுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் சர்க்கரைப்பொங்கல், பாயாசம், சர்க்கரை கலந்த பால் போன்றவை நிவேதனம் செய்து வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து வந்தால் நம்முடைய முன்னேற்றம் நம் கண் கூடாகத் தெரியவரும். அம்பிகைக்கு பிரியமான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து சகல சக்திகளையும் பெறுவோம்.
ஓம் ஶ்ரீ மாத்ரே நம .