அற்புத விநாயகர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அற்புத விநாயகர் பற்றிய பதிவுகள் :

விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம். மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார். விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர். கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது. 

புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார். நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top