தொழில் தடைகள், கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் அதிசய ஆலயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தொழில் தடைகள், கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் அதிசய ஆலயம் பற்றிய பதிவுகள் :

ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்ம நாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 

திருக்கோவிலின் அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். 

தேய்பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். 

தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக்கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கருவறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெறுகிறது. 

இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாத வனத்தை அடையலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top