ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை.

6
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை.

அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் - ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் - அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. 

பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். 

உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க…. அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.

ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.

இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய “சௌபாக்ய பாஸ்கரம்” என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).

சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –

ஸ்ரீமாதாவின் அவதாரம்

கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம்
மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்

தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா’ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ’ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!.

தத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!

அதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.

தத்துவங்களின் பெருவெளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.

மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. இது சாங்கிய தரிசனம்.

அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன்,அறிவு,அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. இது வேதாந்த தரிசனம்.

பசு’பாச’ விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி’வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது சைவ சித்தாந்தம.

என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும். ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்.

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
“துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே”
என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம்
செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள்
பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி
ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை
செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்
செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் . பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும்
அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப்
பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது
சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட
புண்ணியம் நமக்கு சேரும்.

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்

Post a Comment

6 Comments
  1. உண்மை.இது தெரிந்துஅவளைநெருங்கநினனைக்க55 வருடங்கள் ஆகிவிட்டது.காலைகெட்டியாகபிடித்துக்அவள்தான்அருளவேண்டும்.

    ReplyDelete
  2. Om sri.lalithambike namosthuthe.

    ReplyDelete
  3. I breath lalithambal . I had been to thirumeyachur 5 times n had the bagyam of chanting this LS all the time. I hv no words to express the deiveegam in this. She is always with our family. We r blessed to chat LS daily as our Kula Deivam itself is ambal Siruvachur Sri Madhura Kaligambal.

    ReplyDelete
  4. இதை விட அற்புதமாக யாராலும் விளக்க முடியாது.

    ReplyDelete
Post a Comment
To Top