நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமால் சிவ பூசை செய்த தலங்கள் பற்றிய பதிவுகள் :

திருமால் சிவபூசை செய்து வரம் பெற்ற தலம் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில், திருமாற்பேறு மாறிலா மணிகண்டீசர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், அமெரிக்காவில் உள்ள பேறு மற்றும் பல.   

இந்த ஊழித் திருமால் மட்டுமன்றி எல்லா ஊழிக் காலத்திலும் எல்லா விசுணுவும் வழி வழியாய் சிவனடியாராய் சிவ பூசை செய்வதை " அயனும் திருமாலும் வான் நாடர் கோவும் வழி அடியார் " என்று திருவாசகம் போற்றுகிறது. 

திருமால், பராசக்தி முதலியோர் எந்த வடிமும் மேற்கொள்வார்கள். ஆனால் அவர்களால் மீண்டும் தெய்வம் ஆக முடியாது. சிவ பூசை செய்து சிவனருளால் மட்டுமே தெய்வமாக முடியும். திருமால் பல அவதாரம் கொண்ட போது மறக்கருணை (சங்கார மூர்த்தி), அறக்கருணை (அனுக்கிரக மூர்த்தி) காட்டும் சிவனருளால் மீண்டும் விசுணுவாகி வைகுண்ட வாழ்வு பெற்ற தலங்கள் பல.

மகா விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் செய்த போது சிவ பூசை செய்த தலம் மச்சிலிப்பட்டினம். இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

ஆமையாக ( கச்சு, கூர்மம்) அவதாரம் செய்த போது சிவ பூசை செய்த தலம் செங்கற்பட்டு அருகே உள்ள திருகச்சூர் ஆலக் கோயில் விருந்தீசர் திருக்கோயில், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் மற்றும் பல.

வராக (பன்றி) அவதாரம் எடுத்த போது சிவ பூசை செய்த கோயில் கும்பகோணம் அருகே உள்ள திருச் சிவபுரம் சிவபுர நாதர் கோயில்.

"வெண் பன்றி முன் நாள் சென்று அடி வீழ் தரு சிவபுரமே" (தேவாரம்) என்று பன்றி செய்த பூசையைப் புண்ணிய பாலகர் போற்றுகிறார்.  

நரசிம்ம அவதாரம் செய்த போது சிவ பூசை செய்த தலம் திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில். சிங்கபுரி (சிங்கப்பூர்) மற்றும் பல. 

"சிங்கம் கொல்லும் சேவகம் போற்றி" (11 ஆம் திருமுறை பட்டினத்தடிகள்) என திருவாலங்காட்டில் நரசிம்மத்தை சங்காரம் செய்து விசுணுவை வெளிப்படுத்தி வைகுண்ட வாழ்வு அருளிய ஆலங்காட்டீசருக்கு தேவர் சிங்கப் பெருமான் என்று பெயர். 

"சித்தா சித்தித்திறம் காட்டும் தேவர் சிங்கமே" என்று சுந்தரர் போற்றுகிறார். ரத்த வெறி கொண்டு எல்லோரையும் தாக்கிய நரசிங்கம் கொல்லப்பட்டு நரசிம்மர் மீண்டும் விசுணுவானதால் யோக நரசிம்மர்.

வாமனனாகப் பிறந்த போது சிவ பூசை செய்த கோயில்கள் திருமாணிகுழி உதவிநாயகர் கோயில், குறுமாணக் குடி (கண்ணார் கோயில்) கண்ணாயிர நாதர் கோயில் மற்றும் பல. 

"நித்த நியமத் தொழிலனாகி நெடு மால் குறளனாகி மிகவும்,
சித்தம் அது ஒருக்கிச் சிவ வழிபாடு செய நின்ற சிவலோகன்".

என்று வாமனன் செய்த சிவ பூசையைத் தெய்வ மழலை காட்டுகிறார். பரசுராமர் தவமும் சிவ பூசையும் செய்து பரசு என்ற மழுவாயுதத்தை (கோடரி) பரமேசுவரனிமிருந்து பெற்றார். கேரளம் முழுவதும் பல இடங்களில் லிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். கேரளத்தில் பெருகியிருந்த ஈசுவரன் கோயில்களை "மலை நாடு உடைய மன்னே போற்றி" (திருவாசகம்) என்று மாதவச் செல்வர் மாணிக்க வாசகர் போற்றுகிறார்.

வைதீசுவரன் கோயில் அருகே உள்ள திருநின்றியூர் மகாலட்சுமீசுவரர் கோயிலில் மகாலட்சுமீசுவரரைப் பூசித்த பரசுராமர் முந்நூறு வேதியர்களோடு முந்நூற்று அறுபது வேலி கொண்ட நின்றியூரை மகாலட்சுமீசுவரருக்குக் காணிக்கையாக அளித்துத் திருப்பணி புரிந்து ஈசன் திருக்காட்சி பெற்றார். இதை

"மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி ஓங்கு நின்றியூர்என்று உனக்கு அளிப்பப் பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென் திருநின்றியூரானே "

என்று சுந்தரர் போற்றுகிறார். செங்கற்பட்டு அருகே திரு இடைச்சுரம் இடைச்சுர நாதர் கோயிலில் பூசை செய்து நடராசரின் திருநடனக் காட்சி கண்டார். சென்னை அருகே அயன்புரத்தில் (அயனாவரம்) பூசித்த பரசுராமருக்கு அருளிய பரசு ராமேசுவரர் கோயில் உள்ளது.
 
இராவணனைக் கொன்ற பழி போகவும் மற்றும் பல காரணங்களினாலும் இராமன் சிவ பூசை செய்த தலங்கள் இராமேசுவரம் இராம நாதர் கோயில், இராமனதீசுவரம் (திருக்கண்ணபுரம்) இராம நாதர் கோயில், திருத்திலதைப்பதி மதி முத்தர் கோயில் மற்றும் பல.   

காணாமல் போன மகனை மீண்டும் பெற கண்ணனும் ருக்மிணியும் பதினாறு சோம வார விரதம் இருந்து சிவ பூசை செய்தனர். பன்னிரு சோதிலிங்கத் தலங்களான சோமேசுவரம் சோம நாதர் கோயில், குசுமேசுவரம் கிராணேசுவரர் கோயில், கேதாரம் கேதாரேசுவரர் கோயில் மற்றும் பல. சோம நாதம் சோமேசுவரர் கோயிலில் கண்ணன் வெள்ளித் தோரணம் அமைத்துத் திருப்பணி செய்தான். கண்ணன் உபமன்னியு முனிவரிடம் தீட்சை பெற்று நித்திய பூசை செய்து சிவனடியாராக வாழ்ந்தான்.

மோகினி சிவ பூசை செய்து வழிபட்ட தலம் கேரளத்தில் பல. "சாத்தனை மகனா வைத்தார்" (அப்பர்) என விசுணுவிற்குச் சக்கரமும் முருகனுக்கு வேலும் பிற ஆயுதங்களும் பரசுரமருக்குக் கோடரியும் வந்தது போல் ஈசனருளால் மோகினியின் மடியில் வந்த மனிதக் குழந்தையை எடுத்து அணைத்த போது மீண்டும் விசுணுவாகி வைகுண்டம் மீண்டார்.

Post a Comment

Previous Post Next Post