சூரியநாராயணன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவகிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது.
கோயில் சிறப்பு :
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.
நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.
இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.
உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.
இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.
இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.
சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பாலும் நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோயிற்சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.
கோயில் திருவிழா:
ரதசப்தமி உற்சவம், பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
பிரார்த்தனை :
நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷம் உள்ளவர்களும் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர். இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.
நேர்த்திக்கடன் :
சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக கருதப்படுகிறது. நவகிரக தோஷம் விலக நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிஷேகம் செய்தல் நல்லது. தவிர அபிஷேகம் அர்ச்சனை துலாபாரம், கோதுமை, வெல்லம், விளைச்சல் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள். அன்னதானம் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.
Y
ReplyDelete