கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்யாண வெங்கடேச பெருமாள் பற்றிய பதிவுகள் :

கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்க்கை அமையும்!

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.

நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தலவரலாறு

ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார்.

அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே “திருவுந்தி பெருமான்’ என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

“உந்தி’ என்றால் “வயிறு’. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் “சதுர்முகன்புரி’ (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது.

நாரதர் பூண்டி

ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார்.

12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு “நாரதர் பூண்டி’ என பெயர் ஏற்பட்டது. அதுவே “நார்த்தாம்பூண்டி’ என மருவி விட்டது.

12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவராயர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது.

பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் “கல்யாண வெங்கடேசப் பெருமாள்’ எனப்படுகிறார்.

பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

இருப்பிடம்

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top