குரு ஆதி சங்கரருக்கு அருளிய மூகாம்பிகையும் சோட்டாணிக்கரை பகவதி அம்மனும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குரு ஆதி சங்கரருக்கு அருளிய மூகாம்பிகையும் சோட்டாணிக்கரை பகவதி அம்மனும் பற்றிய பதிவுகள் :

காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி - சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள்.

கேரளாவில் சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் ரௌத்திர தேவதை அல்ல, காளியும் அல்ல.

சாந்த சொரூபிணி என்று கருதப்படுகிறாள். ஆதிசங்கரர் காலத்திலேயே நடந்த அற்புத நிகழ்ச்சி ஒன்றை இதற்கான காரணமாக சொல்கிறார்கள்.

பாரததேசம் முழுவதும் பாதயாத்திரை சென்ற ஆதி சங்கரர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்குப் போனார். அம்பாளின் அந்த ரூபத்தில் மனம் ஒன்றினார்.

‘தாயே உன் சக்தி எங்கும் உள்ளது. எனினும் இந்த ரூபத்தில் நீ கேரளா பூமிக்கு வர வேண்டும்” என்று வேண்டினார்.

ஆதிசங்கரரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய சாமுண்டீஸ்வரி அவரது அழைப்பை ஏற்றாள். மகனே ! நீ முன்னால் நட நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீ எக்காரணம் கொண்டும் பின்புறம் திரும்பிப்பார்க்ககூடாது. தவறினால் நீ திரும்பிப்பார்த்த இடத்திலேயே நான் நின்று விடுவேன். அதுவே என் குடியிருப்பு என்றாள்.‌ சங்கரர் மனம் மகிழ்ந்து அம்பிகையின் நிபந்தனையை ஏற்று நடந்தார். ஈஸ்வரி தொடர்ந்தாள்.

அம்பாள் நடக்கையில் அவளுடைய கை வளையல்கள் குலுங்கின. கால்களில் அணிந்திருந்த சலங்கையின் ஒலி, மெட்டியில் இருந்த முத்துக்களின் ஒலிகள் எழுந்தன.

அமைதியான காட்டு வழியில் அந்த ஒலிகள் இனிமையாக ஒலித்தன. அந்த ஒலிகள் சமஸ்கிருத சொற்களை நினைவுபடுத்தின. ஒலிகள் தானே சொற்களின் மொழியின் தாய்.

ஓரிடத்தில் ஒலிகள் நின்றுவிட்டன. நிசப்தம், அமைதி. ஆதி பராசக்தியின் ஆபரண ஒலிகள் கேட்க வில்லையே? அச்சத்துடன் ஆதிசங்கரர் மெல்ல திரும்பிப் பார்த்தார். “மகனே! நிபந்தனையை மீறி விட்டாய் இனி நான் இங்கேயே இருக்கிறேன்.

இதுவும் பரசுராமனின் பூமியே!” என்று அம்பாள் அங்கேயே நின்று விட்டாள். அந்த இடம் எது தெரியுமா? கோலமகரிஷி தவம் செய்த கொல்லூர்.

அங்கே அம்பாள் மூகாம்பிகையாக எழுந்தருளினாள். ஆதி சங்கரரும் சில காலம் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் வளரும் வரை தங்கியிருந்தார். அப்போது அம்பாள் ஆதி சங்கரருக்கு ஒரு வாக்களித்தார்.

“சங்கரா.. நான் மேலும் உன்னைத் தொடர வில்லை. என்று வருந்தாதே நான் தினமும் உஷத் காலத்தில் சோட்டாணிக் கரையில் வித்யா ரூபிணியாக காட்சி தருகிறேன்” என்றார்.

அவ்விதமே காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி-சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள்.

இந்த நம்பிகையுடன் பூஜிக்கிறார்கள். ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு அட்சரப்பி யாசம் (எழுத்து தொடக்கம்) விழா போல் நடக்கும்.

மூகாம்பிகை கோயிலில் தினசரி இரவு 9 மணிக்கு கஷாயதீர்த்தம் வினியோகித்த பிறகு நடைஅடைத்து விடுவார்கள்.

மறுநாள் அதிகாலை கோயில் 5 மணிக்குத் திறந்தாலும் பூஜை 5.30க்கு தான் ஆரம்பம். ஆனால் சோட்டாணிக்கரையில் அதிகாலை 3 மணிக்கு கோயில் திறந்து 4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள்.

அப்போது மூகாம்பிகை சோட்டாணிக்கரையில் சரஸ்வதியாக எழுந்தருள்வதாக நம்பிக்கை. அதற்கேற்ப சோட்டாணிக்கரையில் பூஜைகள் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top