ஆடி மாதம் பற்றிய சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாதம் பற்றிய சிறப்புகள் :

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆடி மாதம் நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதம் கிடையாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. 

ஆடி மதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்கிற அளவிற்கு விசேஷமான மாதத்தை ஏன், நல்ல காரியங்கள் செய்யக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஆதியில், ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்து தான் பல சுபநிகழ்ச்சிகளை நம்முடைய முன்னோர்கள் நடத்தி வந்தார்கள். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைத்து வந்தார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் பிறந்த கதை சுவாரஸ்யமானது.  

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர். சிவபெருமானை பிரிந்து தேவி பார்வதி தவம் செய்யும் சூழ்நிலை ஒரு முறை ஏற்பட்டது. இதை அறிந்த ஆடி எனும் தேவகுலமங்கை பாம்பினுடைய உருவத்தை எடுத்து யாரும் அறியாத வண்ணம் கயிலையில் நுழைகிறாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் செல்கிறாள். இவள் சிவபெருமானின் அருகில் சென்ற நேரத்தில் ஈசன் ஒரு கசப்பான சுவையை உணர்கிறார். தன் அருகில் வந்தவள் பார்வதி அல்ல என்பதை தெரிந்து கொண்ட ஈசன், தன்னுடைய சூலாயுதத்தை எடுத்து ஆடியை அழிக்க எத்தனித்தார்.  

சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடைய செய்தது. அந்த தேவமங்கையும், சிவனை வணங்கி, 'ஒரு நிமிடமாவது தங்களுடைய அன்பான பார்வை என்மீது பட வேண்டும் எனும் நோக்கத்துடன் இப்படி நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும்' என கூறினாள். சிவபெருமான் அதற்கு என் தேவி இல்லாத நேரத்தில் நீ அவளை போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே நீ பூவுலகில் கசப்புடைய மரமாக பிறப்பாயாக என்றார். அதற்கு அவள் இதற்கு என்ன விமோசனம் என சிவபெருமானிடம் கேட்க, ' நீ கவலை கொள்ள வேண்டாம். நீயே கசப்பான மரமாகி போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்கு கிட்டும். சக்தியை வழிபடுவது போல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன்னுடைய பெயராலேயே ஒரு மாதமும் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த நேரத்தில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதை செய்வாய்' என்று அருளினார்.

இது புராண கதையாக இருந்தாலும், ஆடி மாதத்திற்கும் வேப்பமரத்திற்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்தது தானே ? பொதுவாக ஆடி மாதத்தின் ஆரம்பத்தில், பருவ நிலை மாறும். ஈக்களில் ஆரம்பித்து பல்வேறு பூச்சிகளும், கிருமிகளை வெளியில் வரத்துவங்குகிற பருவ நிலையாகவும் இருக்கிறது. இதற்கான கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் வேப்பிலையை இந்த பருவத்தில் பயன்படுத்துகிறோம்.

குளிர் காலத்தின் துவக்கமாகவும் ஆடி மாதம் இருப்பதால் தான் உடலின் வெப்ப நிலையை சமநிலைக்குக் கொண்டு வருவதற்காக ஆடி மாதத்தில் கேழ்வரகு கூழ் ஊற்றி, அம்மனுக்குப் படைத்து குடிக்கிறோம். அற்புதமான இந்து மதத்தில் இறை நம்பிக்கையோடு, ஆரோக்கியத்தையும் கலந்து வைத்ததால் தான் இன்று வரையில் அதைப் பின்பற்றி வருகிறோம். 

பின் ஏன், ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைக்கிறார்கள் ?

இதற்கும் காரணத்தைச் சொல்லி தான் நமது முன்னோர்கள் செய்து வந்தார்கள். ஆடியில் தம்பதியர் சேர்ந்தால், வெயில் கொளுத்தும் சித்திரையில் குழந்தை பிறக்கும். மருத்துவ வசதிகள் அற்ற அந்த காலத்தில், சித்திரையில் பிரசவ வலியை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான் ஆடியில் புது மணத் தம்பதியரைப் பிரித்து வைக்கிறார்கள். அதனால் ஆடி மாதம் நல்ல மாதம் தான்.

நமது ஆரோக்கியத்தை காக்கும் மாதமாகவும் ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் ஆதிசக்தியின் அம்சமாக இருக்கும் வேப்பிலைக் கொளுந்தை வாரம் ஒரு முறையாவது குழந்தைகளுக்கும் கொடுத்து, கூழ் பருகி ஆரோக்கியத்தையும் காத்து வாருங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top