புராணங்களின்படி, ஆடி மாதத்திற்கு முன் வரும் முழு நிலவு அதாவது, பௌர்ணமி தினத்தன்று, குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாகும்.
குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும், இந்த திருநாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர் ஒரு சிறந்த குருவாகக் கருதப்பட்டவர். மேலும், அவர் வேதங்களை 4 வகைகளாக பிரித்தவர். அதாவது, வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே.
சமஸ்கிருத வார்த்தை
குரு பூர்ணிமா தினமானது, ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாகும். சமஸ்கிருத வார்த்தையான ‘குரு' இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது ‘கு'என்பது ‘இருள்'என்று பொருள் மற்றும் ‘ரு' என்பதன் அர்த்தம் ‘இருளை அல்லது அறியாமையை நீக்குதல்.' அதாவது, குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். புத்தர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியமான தினமாகும். இந்த நாளில், புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சார்நாத்தில் வழங்கினார். சமணர்களுக்கும் இந்த நாள் முக்கியமானது.
குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம்:
மிகப் பெரிய முனிவரும், மகாபாரதத்தின் ஆசிரியருமான வேத வியாசரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் குரு பூர்ணிமா விழா அனுசரிக்கப்படுகிறது. மகாபாரத காவியத்திலும் அவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.
மகாபாரதம் தவிர, இவர் 18 இந்து புராணங்களையும் எழுதியுள்ளார். மேலும்,வேதங்கள் நான்கையும் திருத்தியுள்ளார்.
வேத வியாசரின் பிறந்த நாளை குரு பூர்ணிமாவாக மக்கள் கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்றால், வியாசர் பெரிய முனிவர் மட்டுமின்றி, மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தவர். அவரது குரு குலத்தில் படிக்கவும், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் ஏராளமான மாணவர்கள் அங்கு சேர்ந்தனர்.
இந்த நாளில் மக்கள், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கியதற்காக அவர்களின் ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர்.
புத்தர் இந்த புனித நாளில் தனது முதல் பிரசங்கத்தை வழங்கினார் என்று புத்தர்கள் நம்புகின்றனர். புத்தர் ஒரு இளவரசராக பிறந்தவர். ஆனால், அவர் ஆன்மீகத்தின் பாதையில் சென்று ஞானம் பெற வேண்டும் என்பதற்காக தனது ராஜ்யத்தை துறந்தவர் ஆவார்.
புத்தரின் பக்தர்கள், அவரை வழிபடுவதற்கும், அவருடைய போதனைகளிலிருந்து ஞானத்தை பெறுவதற்காகவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, சிவபெருமானின் பக்தர்கள், ஆடிக்கு முன் வரும் பௌர்ணமியான இந்த நாளில் சப்தரிஷிக்கு யோகா மற்றும் பிற முக்கிய வாழ்க்கைப்பாடங்களைப் பற்றி கற்பித்ததாக நம்புகின்றனர்.