ஸ்ரீலலிதாம்பிகை வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீலலிதாம்பிகை வழிபாடு பற்றிய பதிவுகள் :

கஷ்டங்கள் வரும் போது அதிலிருந்து நம்மை காப்பவள் ஸ்ரீ மாதா லலிதாம்பாள். உலகில் அசுரர்கள் தோன்றும் போது அவர்களை அழிக்க அவதாரம் எடுத்து உலத்தை காத்தவள் ஜகன் மாதா லலிதாம்பாள். 

சாக்த சமயம் எனும் ஆலமரத்திலிருந்து ஒரு விழுதாகத் தோன்றி, தனி மரமாகத் தழைத்த மார்க்கமே "ஸ்ரீவித்யா' மார்க்கம். ஆதாரமாக நிற்கும் தத்துவத்தில் சைவம் சிவத்தையும், சாக்தம் சக்தியையும் முழுமுதற் பரம்பொருளாகக் காணும் இடத்து, ஸ்ரீவித்யா மார்க்கம், ஸ்ரீ லலிதாம்பிகையை சிவசக்தி ஐக்கிய ரூபிணியாகக் காண்கிறது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் சித்சக்தியாக விளங்கும் அன்னையை உபாசனை செய்வதன் மூலம் சிவசக்தி ஐக்கியமாகி பேரின்ப முக்தி நிலை அடைவதையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். 

ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பிகையை காளி, தாரா, மாதங்கி முதலிய 10 அவதாரங்களாக வழிபடுகின்றனர். அதில் "லலிதா திரிபுரசுந்தரி' அவதாரமும் ஒன்று.
ஸ்ரீ லலிதாதேவி மந்திரரூபமாய் விளங்குபவள். பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் முதல் பகுதியாகிய வாக்பவ கூடம் தேவியின் முகமண்டலம். நடுப்பகுதியாகிய காமராஜ கூடமானது அவளுடைய சரீரம். கடைப்பகுதியாகிய சக்தி கூடமே அவள் திருப்பாதம். அன்னை குண்டலினி சக்தியாகத் திகழ்பவள். நிர்குண உபாசனையாலும், சகுண உபாசனையாலும், பக்தியாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் எவ்விதமான மார்க்கங்களாலும் அன்னையை அடையலாம். இவ்வுலகைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளல் புரிந்து திருவிளையாடல் புரிகின்றாள். 

இவ்வளவு மகத்தான அந்த மகா சக்தி, கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். ஆண்டான்-அடிமை என்ற புற விளக்கம் மாறி, அன்னை-மக்கள் என்கின்ற அகவிளக்கம் கொண்டு அருள்புரிகின்றாள். தன்னை மனமுருக வேண்டுபவர்களின் துயர் நீக்க குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடோடி வரும் அன்னையைப் போல வந்து காத்தருள்கிறாள்.

லலிதா பரமேஸ்வரிக்கு "சம்ஹார வர்த்தினி' என்ற ஒரு பெயரும் உண்டு. அசுரர்களை சம்ஹரிப்பதால் இப்பெயர் பெற்றாள். கருணைக் கண் கொண்டு காப்பதால் அவளே காமாட்சி! ஒவ்வொரு இடர்ப்பாடான காலத்திலும் கடவுளரும், தேவர்களும், முனிவர்களும் அவளை நாடிச் சென்று காத்தருள் புரியவேண்டி தவம் செய்கின்றனர். அசுரர்களான, மதுகைடபன், மகிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்த பீஜன், சும்பன், நிசும்பன், அருணன், பண்டாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்தவள்! இதில் பண்டாசுர வதம் முக்கியமானது. அவனை சம்ஹரிக்கவே, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அவதரித்தார்.

ஒருமுறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரமேஸ்வரனின் மீதே கணை தொடுத்த மன்மதன் சிவனுடைய நேத்ராக்னியால் எரிந்து சாம்பலாக, அந்த சாம்பலிலிருந்து பண்டன் என்ற அசுரன் உண்டானான்.

 அவன் பரமேச்வரனை வேண்டி தவம் செய்து அரிய வரங்களைப் பெற்று அதன் கர்வத்தால், தேவர்களுக்கு ஏராளமான தொல்லைகள் கொடுத்து வந்தான். அவனை அழிப்பதற்காக தேவர்கள் அம்பிகையைக் குறித்து பெரிய யாகம் செய்ய, அந்த யாக குண்டத்தில் தோன்றினாள் அம்பிகை. அவ்வாறு அம்பிகை தோன்றிய நாள்தான் மாசி மாதம், மக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினம். லலிதை காமாக்ஷி ஆக காஞ்சி பீடத்தில் எழுந்தருளியது பூரம் நட்சத்திரத்தில். அதனால் தான் அம்பாளுக்கு ஆடி பூரம். மற்றும் ஐப்பசி பூரம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அம்பிகை பண்டாசுரனை வதைத்து அமரர்களின் துயர் தீர்த்தாள். 

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி "ஸ்ரீபுரம்' என்ற இடத்தில் வசிப்பதாகக் கூறுகிறது புராணங்கள். அந்த ஸ்ரீபுரத்தில் திவ்யமான ராஜ கிருஹத்தின் நடுவில் நவரத்தின மயமான சபையில் சிந்தாமணியால் உருவாக்கப்பட்ட கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய, ஒப்புயர்வற்ற, அழகிய சிம்ஹாசனத்தில் அம்பிகை பரமேஸ்வரருடன் அமர்ந்திருக்கிறாள். அந்த ஸ்ரீபுரமே ஸ்ரீசக்ரவடிவில் ஸ்ரீவித்யா உபாசகர்களால் பூஜிக்கப்படுகிறது. அந்த ஸ்ரீசக்கரத்தில் 9 சக்கரங்கள் இருக்கின்றன. 

ஒவ்வொரு சக்ரத்திற்கும் ஆவரணம் என்று பெயர். அதன் நடுவில் பிந்து வடிவமாக இருக்கும் இடத்தில் ஸ்ரீமாதா காமேஸ்வரருடன் சேர்ந்து அமர்ந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்து வருகிறாள். அந்த ஸ்ரீசக்கரமே நம் உடல். 9 ஆவரணங்களும் நம் உடலிலேயே உள்ளன. ஸ்ரீமாதா நம்மிலேயே உறைகிறாள் என்பது இதன் பொருள். இந்த அம்பாளை ஸஹஸ்ராரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்க, அந்த தியானத்தின் முதிர்ச்சியில் அங்கிருந்து அமிர்தம் பெருகி சரீரம் முழுவதும் பரவி எல்லையற்ற பேரானந்தம் உண்டாகிறது.

சகஸ்ர நாமாக்களில் உயர்ந்தது வாக்தேவிகளால் இயற்றப்பட்ட லலிதா ஸகஸ்ரநாமமாகும். இதில் உள்ள வார்த்தைகள் சத்தியமானவை, மந்திர சக்தியுடையவை. இது எல்லா ரோகங்களையும் போக்கும், ஸம்பத்துகளை வளர்க்கும்.

 அபம்ருத்யுவையும் கால மிருத்யுவையும் தடுத்து நிறுத்தும். நீண்ட ஆயுளும் உண்டாகும். ஸ்ரீவித்யா உபாசனையால் சாதகனுக்கு சிறந்த ஞானம், திரண்ட செல்வம், எதையும் வெல்லும் ஆற்றல், வாக்வல்லமை வசீகரிக்கும் ஆற்றல் இவற்றுடன் முக்தியும் கிடைக்கும். 

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி ஆவிர்பவித்த திருநாள் மாசி மாதம் மக நட்சத்திரதில் தான் அன்று சாக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அன்று அன்னையை ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம், லலிதா திரிசதி, ஸொந்தர்ய லஹரி, மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா, லலிதா பஞ்சரத்னம், வரிவஸ்யா ரகசியம், அபிராமி அந்தாதி போன்ற தோத்திரங்களால் வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புகளைப் படைத்து, சுவாசினிகளுக்கு தாம்பூலம் தந்து வழிபடுவதால், இனிய குடும்பமும் சந்தோஷமான வாழ்வும் நிலைக்கும். பக்தர்களின் லட்சியங்கள் நிறைவேறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top