ஆடி அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு பற்றிய பதிவுகள் :

இன்றைய தினம் தான் நம்முடைய முன்னோர் பித்ருலோகத்தில் இருந்து நம்மை காண்பதற்காக புறப்படுகின்றன.

நம்முடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, எதிர்காலம் சிறப்பாக இருக்க, நம்முடைய சந்ததிகள் மகிழ்ச்சியாகவும் சிறப்பான வாழ்வு வாழ நம்முடைய முன்னோர்களின் அருளும் ஆசியும் அவசியம். இன்று நாம் சந்திக்கும் கடன் பிரச்சனை தொடங்கி, மனதில் அமைதியின்மை வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் நாம் நம்முடைய முன்னோரை வணங்க மறந்ததுதான் என்கிறது நம்முடைய சாஸ்திரங்கள்!

பித்ருக்களை நினைத்து நாம் வழங்கும் தர்ப்பண பூஜைகள் நமக்கு செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், ஆயுளையும், அனைத்துக்கும் மேலாக சொர்க்க பேறு என எல்லா விதமான பலன்களையும் அளிக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது.

மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் சந்ததியினரைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படுகின்றனர். அவர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது மகிழ்ச்சியாக அவர்கள் பயணம் தொடங்க துணையாக இருக்கும்.

ஆடி அமாவாசை அன்று புறப்பட்ட அவர்கள் புரட்டாசி மாதம் வரும் மஹாலய அமாவாசை நாளில் பூமிக்கு வந்து சேருவார்கள். அன்றைக்கு நாம் அளிக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு சென்று சேர்ந்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கடைசியாக தை மாதம் வரும் அமாவாசை அன்று அவர்கள் நம் வீட்டுக்கு வந்து ஆசி வழங்குவார்கள். அன்று நாம் அளிக்கும் தர்ப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அன்றைய தினம் அவர்கள் மீண்டும் பித்ருலோகத்துக்கு புறப்படுவார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வழியனுப்புவதன் மூலம் அவர்களின் ஆசிரை பெறலாம் என்கின்றது நம்முடைய வேதம்.

நம் முன்னோர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வரும் சிராத்த திதி நாள் அன்று அவர்களுக்கு வழிபாடு செய்து எள்ளும் நீரும் விட்டுப் படைக்க வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் திதி நாள் தெரிந்தும் அன்று எள்ளும் தண்ணீரும் வழங்காமல், தானம் கொடுக்காமல், காகத்துக்கு உணவிடாமல் அலட்சியமாக இருந்தால் பித்ரு தோஷம் பற்றிக்கொள்ளும் என்கின்றது வேதம்.

நமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் விஷயத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது. அனைத்து வளங்களையும் பெற்றுச் சிறப்பான வாழ்வு வாழ பித்ருக்களுக்கு உரிய நாளில் அவர்களுக்கு உரியதை வழங்கி அவர்களைத் திருப்தியாக வைத்திருப்பது கட்டாயம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top