பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணம்

2
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணம் பற்றிய பதிவுகள் :

வைகை நதியின் வெள்ளப்பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. அரசன் அமைச்சர்களுடன் கலந்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பற்றி ஆலோசித்தான். கரைகள் உடைத்து மதிற்சுவர்களையும் சாய்த்ததால், ஊருக்குள் வெள்ளம் வரும் முன், கரைகளை உயர்த்த ஆணை பிறப்பித்தான். வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்களும் வைகைக் கரையில் குவிந்தனர்.

 மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்தவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்க ஆரம்பிப்பாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. அவளால் அந்த தள்ளாத வயதில் முடியுமா? ஆனாலும், கடமையுணர்வு மிக்க அவள், தன் இயலாமை பற்றி அதிகாரிகளிடம் சொல்லாமல், கூலிக்கு ஆள் தேடினாள்.சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். 

வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலையுறதா என் காதுக்கு சேதி வந்தது. சரி..சரி... உன் பிட்டென்றால் எனக்கு அமிர்தம் மாதிரி. இந்தப் பிட்டை எனக்கு பசியாற கொடு. உன் பங்கு வேலையைச் செய்து விட்டு வருகிறேன், என்றார். என்னவோ, என் பிட்டை தினமும் சாப்பிட்டவன் போல் பேசுறியே! சரி...இதோ சுவாமிக்கு நிவேதனம் செய்த பிட்டு. இன்று சிவனடியார் யாரையும் காணலே! உன்னையே சிவனா நினைச்சுக்குறேன்! பிட்டை சாப்பிட்டுட்டு வேலைக்கு போ, என்றாள். சிவபெருமானும் பிட்டை ரசித்துச் சாப்பிட்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஓழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். 

திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார். ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா?ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்?என்று கண்டிக்கவும், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான்.

 அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கியவர் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். 

இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு இறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார்கள். தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். 

பிட்டு மட்டுமே சமைத்து, அதையும் இறைவனுக்கு சமர்ப்பித்து, அதில் கிடைக்கும் சிறு வருமானத்தில் மனநிறைவுடன் வாழ்ந்தவளை சிவகணங்களே நேரில் வந்து அழைத்துச் செல்கின்றனர். நானோ, அரசு, ஆட்சி, பணம், பதவி, சொத்து, சுகம் என திரிந்தேன். இதனால், நான் இறைவனிடம் செலுத்திய பக்தியும் பயனற்றதாகி விட்டது. இனியும் இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். இறைவா! என்னையும் ஏற்றுக்கொள், என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது.அரிமர்த்தனா! நீ சம்பாதித்த பொருளெல்லாம் தர்மவழியில் வந்தது. தர்மவழியில் வந்த பொருளையே நான் ஏற்பேன். மற்றவர்கள் பகட்டுக்காக வேண்டுமானால் எனக்காக செலவழிக்கலாம். அதை நான் ஏற்கமாட்டேன். உன் பொருளை மாணிக்கவாசகன் செலவழித்ததை நான் அன்புடன் ஏற்றேன். நரியைப் பரியாக்கி லீலை புரிந்தது நானே! என்றது.

 பாண்டியன் வேகமாக சிறைக்குச் சென்றான். அங்கே மாணிக்கவாசகர் இல்லை. கோயிலுக்கு ஓடினான். சுந்தரேஸ்வரப் பெருமான் முன்பு நிஷ்டையில் இருந்தார் மாணிக்கவாசகர். நடப்பது புரியாமல் சட்டப்படியாக நடந்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார்.

இறைவனாரிடம் பேரன்பு கொண்டவர் எல்லோரும் இறைவனாரின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவர். இறைவனார் எல்லோரிடம் இருக்கிறார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

Post a Comment

2 Comments
  1. Could you please join me in your watsapp group.

    ReplyDelete
  2. Could you please join me in your wats app group.

    ReplyDelete
Post a Comment
To Top