ஸ்ரீ பாலா மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ பாலா மந்திரம் பற்றிய பதிவுகள் :

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே. எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. மேலும் சில ஞானியாரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன. 

புனித மறைகளும், சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர். ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு, எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.

அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது. பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது. அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி. மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களையும் ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபமே அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் செல்லும். பீஜம் என்றால் விதை எப்படி
விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம். எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஓம் ஐம் க்லீம் சௌம்

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி இவர்களின் அம்சம். இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம், ஞானம், அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும். இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம். இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன், பார்வதி, முருகன் இவர்கள் அடக்கம். சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது. 

இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வாழ்வினைத்தரும். இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை. இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.

2. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஓம்‌ ஐம் க்லீம் சௌம் சௌம் க்லீம் ஐம்

3. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஓம் ஐம் க்லீம் சௌம்
சௌம் க்லீம் ஐம்
ஐம் க்லீம் சௌம்

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.
இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். 

சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய்
அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும்.

சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும். வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை
ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top