இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனம் பற்றிய பதிவுகள் :

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நிவேதானமாக படைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.

திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top