தீபாவளி உருவான புராண வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளி உருவான புராண வரலாறு பற்றிய பதிவுகள் :

விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.

இறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.

சிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.

இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

இப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது. 

இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும். 

தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன. 

இறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.

-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.

நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top