நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி பற்றிய சிறப்பு பதிவுகள் :

அல்லல் தீருக்கும் அருகம்புல் சாற்றி கணேசனை கும்பிட மன அமைதி கிடைக்கும்

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் இலைகளின் மூலம் வழிபாடு செய்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை என்றாலும் நம் வீட்டுக்கு அருகே கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் அர்ச்சித்தாலே போதுமானது.

விநாயகரை வழிபட்டே அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு இலைக்கும் ஒரு குறிப்பிட்ட பலன் உண்டு என்பதால் கிடைக்கும் இலைகளைக் கொண்டு 21 முறை கணபதியின் திருநாமங்களைச் சொல்லி சமர்ப்பிக்க வேண்டும். 21 மலர்கள், 21 இலைகள் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதைத் தொடர்ந்து 21 முறை தூர்வாயுக்ம சமர்ப்பணமும் செய்து வழிபட வேண்டியது அவசியம்.

அறுகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. தூர்வா என்றால் அறுகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள். பொதுவாக அர்ச்சனையின் போது நாம் அருகம்புல்லை சாத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று அறுகம்புல் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் அற்புத பலன்களைப் பெறலாம். இரண்டு இரண்டாக அறுகம்புற்களை எடுத்து கணநாதனின் நாமத்தைச் சொல்லி சாத்த வேண்டும். இதனால் நினைத்தது நிறைவேறும்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது. பூஜைக்கு உரிய இந்த புல்லிற்கு ஆகர்ஷன சக்தியை உறிஞ்சும் தன்மை உண்மை. நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல்.

யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.

பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பின்னர் அவரே சாப விமோசனமும் கொடுத்தார். கணேச சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.

கணபதிக்கு ஆள் உயர மாலை வேண்டாம். ஒரு கைப்பிடி அருகம்புல் போதும். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மை தரும். இதற்கு ஒரு புராண கதையே உள்ளது.

ஜ்வாலாசுரன் என்ற அனலன் வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான். ஜ்வாலாசுரன் என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார்.

அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.

அருகம்புல்லினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த பிள்ளையார் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கு பிடித்த அருகம்புல்லைக் கொண்டு யார் பூஜை செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய வரம் தருவேன் என்று கூறினாராம் பிள்ளையார். 

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். 

சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

புல் வகை தாவரங்களுக்கு அதிபதி கேது பகவான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்துவிட்டாலோ அல்லது சந்திரன் கேதுவுடன் சேர்ந்து நின்றுவிட்டாலும் மற்றும் கேதுவின் அஷ்வினி, மகம் மற்றும் மூலம் நக்ஷத்திர பாதங்களில் பிறந்துவிட்டாலும் அவர்களுக்கு ஞாபக மறதியோடு குழப்பமும் ஒருவித பய உணர்வும் எப்போதும் இருக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகரை அருகம்புல் கொண்டு கேதுவின் அஷ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நாட்களில் வணங்கிவர குழப்பங்களும் பய உணர்வும் நீங்கும்.

ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். தான் என்ற அகங்கரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே எளிமையான அருகம்புல்லை விரும்பி ஏற்கிறார் விநாயகர். மனம், வாக்கு, உடல் மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெற வேண்டும் என்பதை காட்டவே அருகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகளைக் கொண்டதாக இருக்கிறது.

அதே போல அர்க்க புஷ்பம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு அர்க்கன் என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். அதோடு விநாயகரின் அருளாசி கிடைக்கும்.

வாழ்வில் தொடர்ந்து பிரச்னைகள், தொல்லைகள், கடன், வறுமை, ஆகியவற்றால் துன்புறுபவர்கள் விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் சாத்தி வழிபட அவை படிப்படியாகக் குறையும். பொதுவாகவே அறுகம்புல் மிகவும் குளுமையானது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குளுமையான அறுகம்புல்லை விநாயகப்பெருமானுக்கு சாத்தி வணங்குவதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post