விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறைகள் பற்றிய பதிவுகள் :

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.

மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும்.

குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் என நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்து பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும்.

விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது 3, 5, 7- ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

என்ன நைவேத்தியம் :

கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாவல் பழம் போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும். பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது, இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யவேண்டும்.

அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. பூஜை முடிந்ததும் அவரவர் சக்திக்கேற்ப பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து ஒரு வேஷ்டி கொடுத்து, தட்சணை அளிப்பது குடும்பத்துக்கு நலம் தரும். மேலும் குறைந்தது 4 ஏழை மக்களுக்காவது அன்னமளித்து பசியாற்ற வேண்டும். நேரடியாக அன்னதானம் அளிக்க இயலாதவர்கள் நமது ஓம் நமசிவாய அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.

களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டுவிட்டுப் பின்பு ஏரி அல்லது கடற்கரையில் விட்டு விடவேண்டும். முடியாதவர்கள் ஓடும் நீரோடையில் விடலாம்.

நன்றி

ஓம் கம் கணபதயே நம

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top