கேதார கௌரி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கேதார கௌரி விரதம் பற்றிய பதிவுகள் :

இந்த விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கடைபிடிக்கப்படும். 21 நாள்களும் இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள், பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை 14 நாள்கள் செய்வது நல்லது. அதுவும் இயலாதவர்கள், தீபாவளி அன்று இந்த நோன்பினை மேற்கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ளும் நாளில், மாலைவரை உபவாசம் இருந்து மாலையில் பூஜை செய்ய வேண்டும். முதலில் கலசத்தை தேங்காய், மாவிலை கொண்டு அலங்கரித்து வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், நைவேத்தியங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து நைவேத்தியம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு, அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

அனைத்து பூஜைகளுக்கும் முதன்மையானது, பிள்ளையார் பூஜை. மஞ்சளில் சிறு பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகக் கடவுளை வணங்கித் தொடங்குவதன் மூலம், பூஜை எந்தத் தடங்கலும் இல்லாமல் முடிந்து சங்கல்ப பலன் பூரணமாகக் கிடைக்கும். 

மலரும் அட்சதையும் கொண்டு விநாயகப் பெருமானின் 16 நாமங்களைச் சொல்லித் துதித்து அர்ச்சித்து, தூப தீபம் காட்ட வேண்டும். பின், விநாயகருக்கு ஏதேனும் ஒரு பழம், வெற்றிலை பாக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு கணநாதனுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும். அப்போது, ‘வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப அவிக்னம் குரு மே தேவ சர்வ கார்யேசு சர்வத' என்று சொல்லித் துதித்து வணங்க வேண்டும்.

பிள்ளையார் பூஜை முடிந்ததும், பிரதான கேதார கௌரி விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். சங்கல்பம் என்பது ஒரு பூஜையை எங்கு, என்று, எந்த வேளையில், எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சொல்லி, அந்தக் காரண காரியங்கள் செவ்வனே நடக்க இறைவனைத் தொழுது கொள்வதாகும். பொதுவாக, எந்த விரதமானாலும் அது கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம், புத்ர, பௌத்ர பாக்கியம், வெற்றி ஆகியன வேண்டிக்கொள்வது வழக்கம்.

சங்கல்பம் செய்து கொண்ட பின்பு, கலசத்துக்குப் பூஜை செய்து, பின்பு அஷ்ட திக் பாலகர்களை வணங்க வேண்டும். பின்பு, பிரதான பூஜையான சிவபெருமானை தோத்தரிக்கும் அஷ்டோத்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன்பின், கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். தோரணத்திலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் கீழ்க் கண்ட மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி

வாஹாய நம: த்விதீயக்ரந்திம் பூஜயாமி

மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் பூஜயாமி

வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் பூஜயாமி

கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் பூஜயாமி

ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் பூஜயாமி

பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் பூஜயாமி

பீமாய நம: அஷ்டமக்ரந்திம் பூஜயாமி

த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் பூஜயாமி

நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் பூஜயாமி

ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் பூஜயாமி

ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் பூஜயாமி

பவாய நம: த்ரயோதசக்ரந்திம் பூஜயாமி

சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் பூஜயாமி

சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் பூஜயாமி

ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் பூஜயாமி

ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் பூஜயாமி

உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் பூஜயாமி

ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் பூஜயாமி

நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் பூஜயாமி

கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் பூஜயாமி

கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி

21 நாள்கள் பூஜை செய்ததன் அடையாளமாக இடப்பட்ட 21 முடிச்சுகளுக்கும் பூஜை செய்து, பின் அந்தத் தோரணத்தைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின், கலசத்துக்கு தூப தீபங்கள் காட்டி நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்திகாட்டி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கேதார கௌரிவிரதம், அனைத்து நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதம் இது. இதை உணர்த்த ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு.

முன்னொரு காலத்தில், புண்ணியவதி, பாக்கியவதி என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர். இருவரும் அரசகுமாரிகள். தங்களின் தந்தை போரில் தோற்ற காரணத்தால், நாடிழந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள், இருவரும் ஆற்றங்கரையோரம் செல்லும்போது, அங்கு தேவ கன்னியர்கள் கேதார கௌரி விரதத்தை மேற்கொண்டிருந்தனர். 

'அது என்ன விரதம்?' என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தாங்களும் அதே விரதத்தைக் கடைபிடித்தனர். அதன் பலனாக, இருவருக்கும் புண்ணிய பலன் ஏற்பட்டது. இழந்த ஆட்சியை அவர்களின் தந்தை பெற்றார். இருவருக்கும் நல்ல கணவர்கள் அமைந்தனர். இதற்கெல்லாம் காரணமான உமாதேவியின் பூஜையான கேதார கௌரி விரதத்தை மறக்காமல் பின்பற்றினர். 

சில ஆண்டுகள் கழித்து, பாக்கியவதி கேதார கௌரி விரதத்தைக் கைவிட்டாள். கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றி அவரைக் கொடியில் வீசினாள். இதனால் அவளுக்கு வறுமை ஏற்பட்டது.

அவளது தங்கையான புண்ணியவதி, தொடர்ந்து விரதத்தைக் கடைபிடித்து வந்த தாள். செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தாள். அவள், தன் சகோதரிக்கு வேண்டிய செல்வம் கொடுத்து உதவ முயன்றும் அனைத்தும் அவளுக்குக் கிடைக்காது போயின. காரணம் என்ன என்று யோசித்தவளுக்கு, பாக்கியவதி கேதார கௌரி விரதம் கடைபிடிப்பதை விட்டுவிட்டது தெரிந்தது. 

மீண்டும் அவளை விரதம் கடைபிடிக்கச் சொன்னாள். இதன்மூலம் இருவரும் மீண்டும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். வறுமை நீங்கி செல்வம் சேரவும், சேர்ந்த செல்வம் நிலைக்கவும் கேதார கௌரி விரதத்தைத் தவறாமல் கடைபிடிப்பது நல்லது என்பதை உலகோர் அறிந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top