நம் சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது. வேத காலந்தொட்டு நம் மகரிஷிகள் அக்னி வளர்த்து வேள்வி நடத்தி இறைவனை வழிபட்டனர். இன்று இதுவே எளிமையாக்கப்பட்டு திருவிளக்கு (தீபவழிபாடாக) மாறியுள்ளது.
திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். திருவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது.
திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால் கெட்ட சக்திகள், செய்வினைகள் அணுகாது.
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின்பு அதனை வீட்டு பூசையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.
இறைவனை நம் இல்லத்திலோ, கோவிலிலோ அல்லது பொது வழிபாட்டு மன்றங்களிலோ எழுந்தருளச் செய்வதே திருவிளக்கு வழிபாட்டின் நோக்கமாகும். இத்திருவிளக்கு வழிபாடு பெண்களுக்கு உரித்தான வழிபாடாகும். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது.
இந்த திருவிளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதற்கான பலன்கள் கிடைக்கும். இதனை ஆண்பாலரும் செய்யலாம்.
திருவிளக்கு வழிபாட்டுக்கு ஏற்ற நாள் நேரம்
பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சூரியன் அஸ்தமனம் ஆகும் வேளையில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது.
திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் தமிழ் மாதங்கள் மற்றும் அதற்குண்டான பொதுப்பலன்கள் :
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்.
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்.
ஐப்பசி - தீராத நோய்களும் தீரும்.
கார்த்திகை - நற்பேறு கிட்டும்.
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.