ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.

ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும். 

தேவி கட்கமாலா கூறும் நவ ஆவரணம் - சிறு விளக்கம்
முதல் நவாவரணத்தில்

முதல் ஆவரணம்

இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

முதல் நவாவரனத்தில் முதல் ரேகை

இது பூபுரம் எனப்படும். ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் நகரத்தின் (ஸ்ரீ புரம் என்பது தேவியின் சாம்ராஜ்யம் ) துவக்கம். நான்கு வாயில்களுடன் கூடியது. இதில் மூன்று ரேகைகள் உண்டு. இதன் தேவி திரிபுராபகவதி. 

இரண்டாவது ஆவரணம்

பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும். வெண்மை நிறமுடைய இதில் பதினாறு ஆகர்ஷன சக்திகள் உண்டு. 

மூன்றாவது ஆவரணம்

பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.இதன் தேவி திரிபுரசுந்தரி. செம்பருத்தி பூ போன்ற நிறம். சிவபெருமானைத் தத்துவமாகக் கொண்டது. எட்டு தாமரை இதழ்களால் ஆனது. எட்டு தேவதைகளை கொண்ட சக்கரம். பக்தனின் அச்சத்தை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் தேவதைகள் .

இந்த எண்மரும் மிகவும் உக்கிரமான தேவதைகள் . ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கும், வழிபடுபவர்களுக்கும், அவர்களின் எதிரிகளை அடக்கி தேவையெனில் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார்கள்.

நான்காவது ஆவரணம்

இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.பரமாத்மா பதினான்கு புவனங்களிலும் நிறைந்திருப்பதை விளக்கும் வகையில் பதினான்கு முக்கோணங்களை கொண்ட சக்கரம். இது மாதுளம் பூ நிறமுடையது . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுரவாஸினி . 

ஐந்தாவது ஆவரணம்

பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.திரிபுராஸ்ரீ என்னும் அம்பிகையை தலைவியாக கொண்ட இந்த சக்கரம் பத்து முக்கோணங்களை கொண்டது. குருவை இறையுருவாக வழிபடுதல் இந்த சக்கரத்தின் சிறப்பு.

ஆறாவது ஆவரணம்

அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.வழிபடுவோரின் ஜீவனை பாதுகாக்கும் சக்கரம். இதில் பத்து கோணங்கள். செம்பருத்தி பூ நிறம். இதன் தலைவி திரிபுரமாலினி.

ஏழாவது ஆவரணம்

புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.ரோகம் என்பது வியாதி, ஹரம் என்பது நீக்குதல். அஞ்ஞானம் என்பதே எல்லா ரோகங்களுக்கும் காரணம் .இந்த சக்கரத்தின் தேவி திரிபுராசித்தா. சிகப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கப்படுகிறாள். எட்டு முக்கோணங்களை கொண்டது இந்த ஆவரணம். இந்த சக்கரத்தை வழிபடும்போது அறியாமை மட்டுமின்றி உடல் ரீதியான வியாதிகளும் நீங்கும். 

எட்டாவது ஆவரணம்

மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.சர்வ சித்தி என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும். இது மூன்று கோணங்களை உடையது. பாசம், அங்குசம், பாணம், கரும்புவில் ஆகிய ஆயுதங்களின் மண்டலங்கள் இவற்றில் உள்ளது. 
இந்த யந்திரம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி வடிவமானது. அக்னி, சூரிய, சந்திர வடிவமான இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுராம்பா.

ஒன்பதாவது ஆவரணம்

பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும். முழுநிறைவான ஆனந்தமயமான நிலையில் சிவனோடு இணைந்து அன்னை தம்பதிசமேதராக அருள் பாலிக்கும் இடம். ஸ்ரீ வித்யை, ஸ்ரீ சக்கர வழிபாடு சாக்த மரபு என்பது சிலர் கருத்து. சாக்தம் என்பது அம்பாளை மட்டுமே வழிபாடு செய்வது . ஆனால் சிவனையும் சக்தியையும் இணைத்து சிவசக்தி ஐக்கிய ரூபமாக வழிபடுதலே ஸ்ரீ வித்யையின் சிறப்பு. சிவமின்றி சக்தி இயங்காது. சக்தி இன்றி சிவமும் அசையாது.

இதர எட்டு ஆவரணங்களையும் பூஜித்து படிப்படியாக பண்பட்டு ஒன்பதாவது ஆவரண பூஜையின் போது உபாசகன், தான் பரபிரம்மத்தின் அங்கம், தன்னுள் இறைவன் நிறைந்திருக்கிறான் என்ற உணர்வை அடைகிறான்.

இந்த ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருந்த அன்னையே ஸ்ரீ மகாதிரிபுரசுந்தரி. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியும் இந்த அன்னையே.

ஒன்பதாவது ஆவரணத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு காமேஸ்வரி என்றும் சிவனுக்கு காமேஸ்வரன் என்றும் திருநாமம். இந்த சிவசக்தி ஐக்கிய நிலையே இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் அனைத்து தெய்வங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ஈரேழு லோகம், உயிர்கள் அனைத்திற்கும் மூலம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top