குலசை தசரா திருவிழாவின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குலசை தசரா திருவிழாவின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

இந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குலசை தசரா திருவிழாதான் சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பல ஊர்களிலுள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாள்கள் விரதமிருந்து தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல மாநிலம் முழுவதிலும் இருந்து, தசரா 10-ம் நாள் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண குலசைக்குப் படையெடுப்பார்கள். 
 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.
 
கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
தசரா நாள்களில் முதல் நாள் துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள் விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள் ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். 
 
"அம்மை நோய் என்றில்லை, சகல நோய் களையும் துன்பங்களையும் நீக்கி வரமருளுவதால்தான், குலசை முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேடமிட்டு தசராவில் அம்மனின் அருளைப்பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
 
குலசை தசராவின் சிறப்பம்சமே, திருவிழாவின் போது பலரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபடுவதுதான். பலர் பல வகையான வேஷங்களைப் போட்டுக்கொண்டு வந்தாலும், காளி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்கள் தான் அதிகம்.
 
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் செவ்வாயும் இருந்தால் அதை `பரிவர்த்தனை யோகம்’ என்று சொல்வார்கள். அதே போல இங்கு சுவாமியின் சக்தியை அம்பாள் வாங்கியிருப்பதால்தான், அம்பாள் சிவமயமாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளின் சக்தியை சுவாமி வாங்கியிருக்கிறார். அதனால்தான் இங்கு சுவாமி சக்தி மயமாகக் காட்சியளிக்கிறார். இதை ’பரிவர்த்தனையோக நிலை’ என்பார்கள். இதனால்தான் இங்கு அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது''.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top