ஐப்பசி மாத சிறப்புக்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐப்பசி மாத சிறப்புக்கள் பற்றிய பதிவுகள் :

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.

இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தீபாவளி பண்டிகை!

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

கந்த சஷ்டி திருவிழா !

இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.

இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

அன்னாபிஷேகம் !

ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.

ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது.

அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

துலா ஸ்நானம் !

ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top