அன்னையை வழிபடும் இந்த ஒன்பது ராத்திரிகளும் நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணக் கூடிய அற்புத வழிபாடு ஆகும். கொலு வைத்து நவராத்திரிகளை கொண்டாட முடியாதவர்கள் கூட நவராத்திரி வெள்ளிக் கிழமையில் இந்த எளிய பரிகாரத்தைச் செய்து நம் வீட்டில் மகாலட்சுமியை அழைக்கலாம்.
அப்படி நாம் வெள்ளிக் கிழமையில் சுமங்கலிப் பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக நவராத்திரிகளில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்குடன் தாம்பூலம் கொடுத்து வழியனுப்புவது முறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும். அதே போல பாலாம்பிகையாக நினைத்து சிறுமிகளுக்கு வஸ்திர தானம் செய்வதும், அவர்களை வீட்டிற்கு அழைத்து அன்னதானம் செய்வதும் மிகவும் விசேஷமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாம் இன்னும் சில விஷயங்களை தெரிந்து கொண்டு வைத்திருப்பது அவசியமாகும்.
நவராத்திரியில் கொலு வைத்து கொண்டாடுபவர்கள் சுமங்கலிப் பெண்களை மட்டும் அழைக்காமல், சிறுமிகளையும் அழைத்து கொண்டாடுவது சிறப்பு. ஒன்று முதல் ஆறு வயதுள்ள இளம் வயது சிறுமிகளை பாலாம்பிகை தாயாகவே நினைத்து அவர்களுக்கு நலங்கு வைத்து வழிபாடு செய்தால் நமக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கப் பெறும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் உண்டாகும்.
சிறுமிகளை அழைத்து வீட்டில் சர்க்கரை பொங்கல், சுண்டல், அல்லது புட்டு போன்ற ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து பூஜை செய்துவிட்டு பின்னர் அந்த சிறுமியர்களுக்கு சந்தன நலங்கு வைக்க வேண்டும். அவர்களை ஒரு மனையில் அமர்த்தி நலங்கு வைக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். பட்டு பாவாடை, சட்டை வைத்து அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் தட்சிணை வைத்து சாக்லேட் போன்ற இனிப்பு பண்டங்கள் கொடுத்து அவர்களுக்கு பூஜைக்கு வைத்த பிரசாதம் படைத்து பின்னர் வழி அனுப்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பாலாம்பிகை அருள் நமக்குக் கிடைத்து மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பின்னர் இதே போல சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், கண்ணாடி, சீப்பு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றுடன் தட்சிணையாக நீங்கள் விருப்பப்பட்ட தொகையை கொடுத்து அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொண்டு வழி அனுப்பலாம்.
இப்படி நவராத்திரிகளில் வெள்ளிக்கிழமையில் மட்டும் செய்து மகாலட்சுமியின் அருளைப் பெற்றுக் கொள்ளலாம். கொலு வைக்க முடியாதவர்கள் மட்டுமல்ல, கொலு வைப்பவர்கள் கூட இவ்வாறு செய்வதால் மிகுந்த நன்மைகளை பெறலாம்.
மேலும் கொழு வைப்பவர்கள் சமைக்கும் பொழுது சமைத்த பொருட்களை சுவை பார்க்க கூடாது. கட்டாயம் அசைவ உணவை வீட்டில் இருக்கும் அனைவரும் 9 நாட்களும் தவிர்க்க வேண்டும். அதே போல இந்த ஒன்பது நாட்களிலும் நீங்கள் சமைக்கும் உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து கொள்ள கூடாது.
இப்படி முறையாக மிகுந்த பக்தியுடன் நவராத்திரியில் அன்னையின் மந்திரங்களை உச்சரித்து, அன்னையை மனதில் நினைத்து வழிபாடு செய்து வந்தால் உங்களுக்கு எந்த தடையும் நெருங்காமல், சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.