அரச வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அரச வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம் பற்றிய பதிவுகள் :

ஒவ்வோர் ஏகாதசியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவற்றின் மகிமைகளை ஏகாதசி மகாத்மியமும் பிரம்ம வைவர்த்த புராணமும் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு புண்ணியமான தினம்தான், ரமா ஏகாதசி.

ரமா ஏகாதசி விரதம் இன்று ( 30-11-2021 ) கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் அரசனைப் போல வாழ்வை இறைவன் நமக்கு அளிப்பார் என்கிறது ஏகாதசி மகாத்மியம். 

ஏகாதசி திதி அன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, துவாதசி அன்று பாரணை செய்து விரதம் முடிப்பது மிகவும் விசேஷமாகும்.

இன்றய தினம் ரமா ஏகாதசி நாளில் விரதம் இருந்து மறக்காமல் பெருமாள் கோவில் சென்று வர அரசனுக்கு இணையான ராஜயோக வாழ்வு தேடி வரும்.

ஏகாதசி விரதம் புராண கதை

முன்னொரு காலத்தில் முசுகுந்தன் என்னும் மன்னன் ஆட்சிசெய்துவந்தான். பரம பாகவதனான முசுகுந்தன், ஏகாதசி விரதத்தை மிகக் கடுமையாகப் பின்பற்று பவன். அவன் தேசத்தில் மனிதர்கள் அனைவரும் விரதமிருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. தேசத்து பக்தர்களும் அந்த விதியைப் பின்பற்றியதோடு அல்லாமல், தாங்கள் வளர்க்கும் உயிரினங்களான ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவற்றிற்கும் உணவு இடாமல் அவையும் உண்ணா நோன்பிருக்கும்படிச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றுவந்தனர். இதனால் அந்த தேசம், தேவலோகத்துக்கு இணையான செல்வத்தோடும் சுகங்களோடும் விளங்கியது.

முசுகுந்தனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சந்திரபாகா. அவளை சோபன் என்கிற மன்னனுக்குத் திருமணம் செய்துவைத்தான். சோபன், உடலால் மிகவும் பலவீனமானவனாக இருந்தான். ஒருமுறை அவன், தன் மாமனார் வீடான முசுகுந்தனின் அரண்மனைக்கு வந்தபோது, அன்று ரமா ஏகாதசியாய் இருந்தது. தேசத்தில் அனைவரும் உபவாசமிருந்தனர். ஆனால், சோபன் உபவாசத்தால் துன்புற்றான். அந்த நாள் முழுவதும் தண்ணீரும் உணவும் இல்லாமையால் அவன் உடல் சோர்வுற்றது. உபவாசம் முடியும் வேளையில், சோபன் உடல் நலக்குறைவுற்று இறந்தான். 

சோபன் ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்த புண்ணியத்தால், கிரியைகளுக்குப் பின் ஜலத்தில் கரைக்கப்பட்ட சோபனின் உடல் விடுவிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. அழிவில்லாத அந்த உடலோடு அவன் திவ்யலோகம் அடைந்து, அங்கிருந்த தேவபுரம் என்னும் அரசை ஆண்டுவந்தான். தேவபுரம், செல்வச் செழிப்போடு திகழ்ந்தது. 

ஆனாலும் அவன் அந்த வாழ்க்கை மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்தான். அப்போது, முசுகுந்தனின் ராஜ்ஜியத்திலிருந்து சோமகர்மா என்னும் அந்தணர் ஒருவர் பிரயாணம் செய்து, தேவபுரம் வந்தடைந்தார். சோபனைக் கண்டதும், அவன் யார் என்பதை அறிந்து அவனுடைய முன் ஜன்மம் குறித்து எடுத்துரைத்து, ரமா ஏகாதசி விரதத்தின் பலனாலேயே அவனுக்கு அந்த வாழ்வு கிடைத்தது என்று எடுத்துக் கூறினார். இதைக்கேட்டதும் சோபன், ஏகாதசி விரதத்தின் மகிமையை அறிந்து , தன் வாழ்வில் எப்போதும் இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தான் என்று கூறப்படுகிறது.

ரமா ஏகாதசி விரதம் சிறப்புகளை உடைய ஏகாதசி விரதம், இன்று நவம்பர் 30 அன்று வருகிறது. தசமி திதி இரவு உணவைத் தவிர்த்து, இன்று காலை குளித்து விட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் நாராயண நாம ஜபத்தில் ஈடுபட வேண்டும். அதிகபட்சமாக ஏழு முறை துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தலாம். 

ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. எனவே, தேவைப்படும் துளசி இலைகளை முன்னைய நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

டிசம்பர் 1ஆம் தேதியன்று அன்று, துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசி பாரணை விதிகள் ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள், மறுநாளான துவாதசியன்று எத்தகைய உணவை சாப்பிட்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான சில விதிகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. 

அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகிய உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். வாழை தொடர்புடைய அனைத்தையும் துவாதசியன்று விலக்க வேண்டும். வாழை இலைக்குப் பதிலாகப் பாக்கு மட்டை தட்டிலோ, தாமரை இலையிலோ, புரசை இலையிலோ உணவு உட்கொள்ளலாம். 

கத்திரிக்காய், புடலங்காய், பாகற்காய் ஆகிய காய்கறிகளை துவாதசி நாளில் சாப்பிடக்கூடாது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். கடுகு, மிளகாய், அனைத்து விதமான கடலைகள், கொத்தமல்லி, தனியா, புளி ஆகியவற்றையும் விலக்க வேண்டும். 

எள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றையும் விலக்க வேண்டும். நெய்யிலோ தேங்காய் எண்ணெயிலோ பொரித்துக் கொள்ளலாம். 

பிரம்மச்சாரி யாரேனும் இருந்தால், அவருக்கு முதலில் உணவளித்துவிட்டு அதன்பின் பாரணை செய்ய வேண்டும்.

இந்த விதிகளின்படி துவாதசி பாரணையை மட்டும் சரியாகச் செய்தாலே ஏகாதசி விரதம் அனுஷ்டித்ததற்கு நிகரான பலனுண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இன்று ரமா ஏகாதசி நாளில் விரதம் இருந்து மறக்காமல் பெருமாள் கோவில் சென்று வர அரசனுக்கு இணையான ராஜயோக வாழ்வு தேடி வரும்.

கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதி னால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top