எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாக்கும் பரிகார தலம். இது மிகவும் பழமை வாய்ந்த ஒரு பரிகாரதலம். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்.
சென்னையிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில், அரக்கோணம் சாலையில் நரசிங்கபுரம் செல்லும் வழியில் மப்பேடு என்னும் ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார். இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள் மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.
அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சிறப்பம்சம்:
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே.
இவள் ஒரு மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்கநாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்.
மூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம் : சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்:
சிவன் சன்னதியின் முன் வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது, இந்த தலத்திற்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வறட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு இப்பகுதி மக்கள் வேண்டிக்கொண்டதாகவும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்படுகிறது.
இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள். கோவிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது.
ஸ்ரீவீரபாலீஸ்வரர் (வீர்யபாலீஸ்வரர்) என்பவர் யார்?
சிவபெருமான் தாருகா வனத்தில் ஸ்ரீபிட்சாண்டாராகத் திருவிளையாடல் புரிந்ததை நாம் அறிவோம். ஞானத்திற்கு வழிவகுக்கும் வேதங்களைத் தம் சுய நலத்தால் அஞ்ஞானத்திற்குப் பயன்படுத்தினர் தாருகாவனத்து முனிவர்கள்.
அதனால் வெகுண்டு உக்கிர நிலையில் மாயைச் சம்ஹாரம் செய்து ஞானேஸ்வரனாகச் சிவபெருமான் பல திருத்தலங்களில் குடிகொண்டு அருள்பாலித்தார்.
அத்தகைய தாருகாவனேஸ்வரப் பிட்சாண்டாரின் அம்சங்கள் நிரம்ப பெற்றவரே ஸ்ரீவீரபாலீஸ்வரர் என்ற வீர்ய பாலீஸ்வரர் ஆவார்.
மப்பேடு ஸ்ரீ சிருங்கீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீர்ய பாலீஸ்வரர் சில விசேஷமான அருள் நிலைகளைப் பூண்டு பக்தர்களை அரவணைக்கின்றார்.
ஸ்ரீபிட்சாண்டவர் கோலமானது அத்வைதத்தைச் சுட்டிக் காட்டும் சிருஷ்டி ரகசியத்தை அறிவிப்பதாகும்.
ஸ்ரீஅகஸ்திய பெருமான் மப்பேடு ஸ்ரீவீர்ய பாலீஸ்வரரைப் பற்றி, “காமத்தைக் காட்டிக் கூட்டி ஓமத் தீயிலிட்டுப் பூமத்தாய்ச் சிருஷ்டித்துக் காக்கும் சாமகான சக்தீஸ்வரன்” என்று புகழ்ந்து போற்றி உரைக்கின்றார்.
ஸ்ரீவீர்ய பாலீஸ்வரர் சந்ததியின்றி வாழும் பக்தர்களுக்குஅருள் புரிபவர், வீர்ய அணுக்கள் குறைவு [ LOW COUNTING ] தளர்வான அணுக்கள் [ chromosome deficiency ] , கருப்பைச் சுருக்கம் போன்ற பல குறைபாடுகளை ஆண் பெண் இருபாலரிடமும் நீக்கி அவர்கள் நன்மக்களைப் பெற ஸ்ரீவீர்ய பாலீஸ்வரர் அருள்கின்றார்.
இச்சிவபெருமான் நன்மக்களை ஈணும் வீர்ய சக்தியைப் பாலிக்கின்ற இறைப் பெட்டகமாக நிலைகொண்டு அருளும் உத்தம லிங்கேஸ்வரர்.
குழ்ந்தைப் பேறு வேண்டுவோர் இத்திருத்தலத்தில் இவரைத் தரிசனம் செய்து ஏழை கர்ப்பிணிகளுக்கு வேண்டிய தான தருமங்கள் ,பிரசவ உதவிகள் போன்றவற்றைச் செய்வாராயின் நிச்சயமாக வேண்டும் பலனைப் பெறுவர்.
மழலைச் செல்வமின்றி ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த வீர்ய பாலீஸ்வரர் ஒரு வரப் பிரசாதியாய் விளங்குகின்றார்.
பிரார்த்தனை :
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொரு மாதத்திலும் தங்கள் மூல நட்சத்திர தினத்தன்று இந்த கோவிலுக்கு வந்து இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் துன்பங்கள் யாவும் விலகி இன்பம் பெருகும்.
தல சிறப்பு :
கோவிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் சன்னதி உள்ளது.
கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரன கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள். துர்க்கையம்மன் திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால், செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், திருமணம் மற்றும் குழந்தை பேறு கிடைக்கும். 42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு:
பிரகாரத்தில் ஆஸ்தான் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
சிவன் சன்னதியில் பெருமாள் காணப்படுவது மிகவும் அபூர்வம். தவிர, மூலவரின் பக்கவாட்டு சுவரில் பிரம்மாவின் சிலை காணப்படுகிறது. வியாழக்கிழமை தோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது.
சோழர் கால கோயில்:
வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது.
இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார்.
ஊர் பெயர் காரணம்:
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால், இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்றும், பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்போது மப்பேடு எனவும் அழைக்கப்படுகிறது.