இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி - ஸ்ரீபைரவ மூர்த்தி அவதார திருநாள்.
ஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர் எதிரிகளை சம்ஹரிப்பவர் தன்னைச் சரணடைந்த பக்தர்களை பாதுகாத்து அவர்களுக்கு நலன்களையும் அருள்பவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) கால பைரவர் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பார். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்தகாசுரன் தேவர்களை மகரிஷிகளை மக்களை எல்லாம் துன்புறுத்தி இம்சித்து மகிழ்ந்தான். இவர்களைக் காக்க ஈசன் திருவுள்ளம் கொண்டார். அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அந்த மகா காலபைரவர் அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் காப்பாற்றினார். படைத்தல் தொழில் செய்வதால் மும்மூர்த்தியரிலும் தானே உயர்ந்தவர் என்ற கர்வம் பிரம்ம தேவனுக்கு உண்டாயிற்று. பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க ஈசன் தன் அம்சமாகத் தோன்றிய கால பைரவரைக் கொண்டு பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். யாருக்கும் கர்வம் இருக்கக்கூடாது என்பதற்காக ஈசன் நிகழ்த்திய லீலை இது.
இந்த தினம் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பு. அப்படி நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம். துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த ஈசன் பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார்.
அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுக்க இருள் சூழ்ந்து சூரியனும் மறைந்து போனது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் (க்ஷேத்ர பாலகர்கள்) என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள்.
ருரு பைரவர்
சண்ட பைரவர்
குரோதன பைரவர்
உன்மத்த பைரவர்
சம்ஹார பைரவர்
பீக்ஷன பைரவர்
கபால பைரவர்
கால பைரவர்
என எட்டு பைரவர்கள்
பைரவரே கோயிலின் காவல் தெய்வமாக இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும் இரவு கோயில் மூடப்படும் போதும் பைரவ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே நமது எஜமானன் சனீஸ்வரனின் குருவாகவும் காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர் பன்னிரண்டு ராசிகள் அஷ்ட திக்குகள் பஞ்ச பூதங்கள் நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர் நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர் மண்டை ஓட்டு மாலை அணிந்தவர் சூலம் பாசம் மழு கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறை நிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் கொண்டவர் பைரவர். நாயை வாகனமாகக் கொண்டவர். அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். அகங்காரத்தை அழிக்கும் தெய்வம் சுக்கிர தோஷத்தை நீக்கும் தெய்வம். சகல சம்பத்துக்களை வழங்குபவர் பைரவர்.
ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்: அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அந்நன்னாளில் நாமும் பைரவரை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவர் தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும், நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சிலயிடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சிற்சில தலங்களில் மட்டும், இரு பக்கங்களிலும் நாய் வாகனங்களுடன் காட்சி தரும் பைரவர் மிக்க சக்தி வாய்ந்தவராவார். அவரைத் தொழுவது சாலச் சிறந்தது.
பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிட்டும். மாலை நேரத்தில் வழிபட, செய்துள்ள பாபம் எல்லாம் விலகும். அர்த்த சாம வழிபாட்டால் மனச்சாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் வளமான வாழ்வும் பெறலாம்.