கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்படுவது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான்.
மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.
இந்த தீபத் திருவிழா திருவண்ணாமலையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வீடுகள்தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். இவ்வாண்டு 19.11.2021 வெள்ளிக்கிழமை தீபத் திருநாள் வருகிறது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும்.
முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாளாகும். தாய் சக்தி சகல ஜீவராசிகளை தந்தையான சிவனிடம் சேர்ப்பாள், ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.
அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானை குறித்து கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.
சர்வ சிவாலயங்களில் பரணி தீபம்
அண்ணாமலையில் நாளை அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்" என்று பெயர் பெற்றது. மற்ற சிவாலயங்களில் இன்று மாலை பரணி தீபம் சிவ சந்நிதிகளில் ஏற்றி வழிபடப்படும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வர்யம் பெருகும்.
கார்த்திகையில் கந்தனுக்கு என்ன சிறப்பு?
கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்.
ஆறு தலை முருகன் ஆறுதலை அருள்பவன். அபயம் என்று சரண் புகுபவர்களுக்கு நல்ல மாறுதலைத் தருபவன். தமிழில் பாகுலம் என்று கூறப்படும் கார்த்திகை மாதம் கார் காலமும் காந்தள் மலர்களும் அதிகம் பூக்கும் இனிய காலம். இந்த கார்த்திகை மாதம் முழுக்கவே முருக வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றே சொல்லலாம். அதிலும் கார்த்திகை மாத பௌர்ணமி நன்னாளில் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் திருநாளில் முருகனை வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பர்.
கந்த பெருமானுக்கு 2 நட்சத்திரங்கள் சிறப்பானவை. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்ததால் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் விசேஷ நட்சத்திரமானது. சரவணப் பொய்கையில் அவதரித்த ஆறுமுகப் பெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்ந்ததால் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரமும் உகந்ததாயிற்று.
மேலும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று ஈசனை வழிபடுவதோடு முருகனை வழிபடுவதும் சிறந்தது. அந்த நாளில் முருகனை வழிபடும் அன்பர்களுக்கு, கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனம் குளிர்ந்து ஈசன் மகன் அருள் செய்வாராம்.
சூரனை வதம் செய்து தேவசேனாபதியான முருகப்பெருமானுக்குக் கார்த்திகை பௌர்ணமிக்கு முந்திய நாள் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ராஜமுருகனான கந்தன் எல்லா ஆலயங்களிலும் விசேஷ அலங்காரத்தில் காட்சி அருள்வார். குறிப்பாக திருப்பரங் குன்றம் முருகப்பெருமானுக்கு சிறப்பான பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். கந்தனை ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்பது ஐதீகம்.
கந்த சஷ்டி ஆறு நாள்களும் விரதமிருக்க முடியாமல் போனவர்கள் இந்த கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து அதே பலன்களைப் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.