பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் :

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று கந்தசஷ்டி விரதம்.

கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் (04.11.2021) வியாழக்கிழமை ஆரம்பமாகி (09.11.2021) செவ்வாய்க்கிழமையன்று நிறைவு பெறுகிறது.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கந்தசஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர், பழனி போன்ற பிரபலமாக உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்கு பின் முருகனின் திருக்கல்யாணமும் நடைபெறும்.

இந்நிகழ்வை காண முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது. 

கந்தசஷ்டி விரத முறைகள் :

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.

விரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும்.

காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி கந்தனை மனதார வழிபட வேண்டும்.

விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்ய வேண்டும்.

விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று. முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வணங்கலாம்.

இவ்விரதத்தின்போது ஆறு நாட்களும் ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும். 

இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.

அதுமட்டுமின்றி வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.

நிம்மதியும், சந்தோஷமும், உற்சாகமும் வாழ்வில் நிறையும்.

சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி கவசம்

சஷ்டி கவசத்தில் புதிரான ஒரு வரியில் அபூர்வமான ஒரு ஒரு ரகசிய மந்திரம் உண்டு

கந்தசஷ்டி கவசம் பாடும்போது,

"ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும், கிலியும்சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்" என்ற வரிகள் வருகின்றன.

இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. ஐயும்(ஐம்), கிலியும்(க்லீம்) சௌவும்(ஸெளம்) ஆகியவை "பீஜாக்ஷரங்கள்' எனப்படும். இதை "பீஜம்+அட்சரம்" என பிரிப்பர்.

"பீஜம்" என்றால் "உயிர்ப்புள்ள விதை"'. "அட்சரம்"என்றால் "எழுத்து". "உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்" ஒன்று சேர்ந்தால் அது "மந்திரம்"ஆகிறது.

அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின் , சித்தியின் , முக்தியின் , ஞானத்தின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான். 

"ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக்களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய "ஸெளம்" என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்... 

இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின் (சரவணபவ, குமாராயநம) மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும். என்பது இந்த வரிகளின் பொருள். 

முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான "சரவணபவ" உடன் "ஓம் ஐம் சரவணபவாய நம", "ஓம் க்லீம் சிகாயை வஷட்", "ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ" என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை எல்லாரும் சொல்லக்கூடாது. ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, முறையாக சொன்னால் நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் முருக பெருமான் அருளினால் வாரங்களாக பெறலாம்.

இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!

மந்திரம்:

ஓம் ஐம் க்லீம் சௌம் சரவண பவாய குமார தேவாய நமஹ!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top