புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரும் என்பது ஐதீகம்.
புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்றும் கூறுகின்றனர்.
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.
சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு. புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை.
புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.
புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.
புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.