எமனுக்கு மறு வாழ்வளித்த ஸ்ரீ எமதண்டீஸ்வரர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எமனுக்கு மறு வாழ்வளித்த ஸ்ரீ எமதண்டீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டு சிவபெருமான் எமனை தன் காலால் எட்டி உதைத்த வரலாறு யாவரும் அறிந்த ஒன்று தான். சிவபெருமானை அத்தகைய கோபத்திற்கு ஆளாக்கிய எமன், தொடர்ந்து தனது தொழிலைச் செய்ய இயலாமல் போகவே, பல்வேறு சிவத் திருத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடினான் எமன். அவ்வாறு எமன் தவமிருந்த தலங்களுள் ஒன்று தான் ஆலகிராமம் திருத்தலம்.

எமனின் தவத்தினைக் கண்டு ஆறுதல் அடைந்த சிவபெருமான், இத்திருத்தலத்திலே எமனுக்கு காட்சி கொடுத்து, ஆறு முறை நீ கங்கையில் நீராடினால் உனது பாவம் நீங்கும் என்று அருள்பாலித்தார். சிவபெருமான் அத்தோடு நில்லாமல், எமன் நீராட வசதியாக ஆலகிராமம் திருத்தலத்திலேயே ஒரு திருக்குளத்தையும் அமைத்து, அத்திருக்குளத்திற்கே கங்கையை வருவித்து, எமன் நீராட அருள் புரிந்தார்.

எமனும் அத்திருக்குளத்திலேயே ஆறு முறை நீராடி, சிவபெருமானைப் பூஜித்து தான் இழந்த பதவியை மீண்டும் பெற்றான். எனவே இத்திருக்குளத்திலே நீராடினால், கங்கையில் நீராடியதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர் பக்தர்கள். நாமும் இத்திருக்குளத்திலே நீராடி, கங்கையில் நீராடியதன் பலனையும், சிவபெருமானின் அருளைப் பெறுவோம். இத்திருத்தலத்திலே அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு எமதண்டீஸ்வரர் என்பது திருநாமம்.     

ஆலகிராமம், விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் ஜி.எஸ்.டீ. சாலையில், மயிலம் செல்லும் வழியில் அமைந்துள்ள கூட்டேரிப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top