சந்தனம், குங்குமம் பூசுவதன் அறிவியல் காரணங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்தனம், குங்குமம் பூசுவதன் அறிவியல் காரணங்கள் பற்றிய பதிவுகள் :


நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல்பூர்வ உண்மைகள் இருப்பது இக்கால அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. நெற்றிப் பொட்டு என்பது உடலின் அனைத்து நரம்புகளும் சங்கமிக்கும் இடமாகும்.

பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட உடலின் பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.

சந்தனத்தின் நன்மைகள்

பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்பவும் உதவுகிறது.

நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக தொடுவதுபோல சுண்டு விரலை பிடிக்கும் பட்சத்தில் மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக இருப்பதால் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சந்தனம் இடுவதன் மூலம் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.

குங்குமத்தின் நன்மைகள்

பெண்களால் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் பெரும்பாலும் அணியப்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதியாக நெற்றிக்கண் அதாவது, புருவ மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும். மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகளும் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டின் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top